46 அலைதலின் ஆனந்தம்
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கறாராகத் திட்டமிட்டுச் செய்பவன் என்கிற எண்ணத்தைப் பார்ப்பவர்களுக்கும் பழகியவர்களுக்கும் உண்டாக்கினாலும் உள்ளூர, எப்படி, எங்கிருந்து, யார் அனுப்பி எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற கேள்விகள் சதாநேரமும் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அந்தந்த க்ஷணங்களில் வாழ்ந்துகொண்டிருப்பது வாழ்நாளுக்கும் தொடரப்போகிற விஷயம் என்பதை அவன் கடைசிவரை அறிந்திருக்கவேயில்லை.
பெருமூச்சுவிட்டபடி கும்பகோணத்தில் வந்து நின்ற ரயில், எங்கே போகிறது என்றுகூடப் பார்க்காமல், போகிற போக்கில் போவதற்கு எங்கே போனால் என்ன என்று, எதிரே நின்றிருந்த பெட்டியில் ஏறிக்கொண்டான்.
வழியிலேயே கக்கூஸ் கதவை ஒட்டி நான்கைந்துபேர் குத்துக்காலிட்டும் நீட்டிக்கொண்டும் சாய்ந்தும் மரவட்டைபோல சுருண்டும் கிடந்தனர். பார்த்தால் யாராவது எழுப்பி அனுப்பிவிடுவார்களோ என்று அரைக் கண்களில் இருந்தனர். காற்றுக்காக உட்கார்ந்திருப்பவனைப்போல, மேல்வேட்டி பறந்துபோய்விடாதிருக்க முனைகளைப் பிடித்து முதுப்பக்கத்தில் முடிச்சிட்டுக்கொண்டு, கம்பிகளைப் பிடித்தபடி படிக்கட்டில் அமர்ந்துகொண்டான். தன்னையறியாமல் கண் சொக்கி தடுமாறியபோது ‘உள்ள போய் உக்காருங்க’ என்று அதிகாரமாய்ச் சொன்னது ஒரு குரல்.
Add Comment