கோஸ்டா ரிக்காவின் முன்னாள் அதிபர் ஆஸ்கர் ஏரியஸ், அமைதிக்கான நோபல் விருது பெற்றவர். எண்பத்தைந்து வயதான இவருக்கு திடீரென அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை. அமெரிக்காவும் சொல்லவில்லை. சில நாள்களுக்கு முன் ட்ரம்ப்பின் ஆட்சியை விமர்சித்து ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார் ஏரியஸ். அது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
விசாவை ஒரு பக்கம் தள்ளி வைப்போம். பனிப்போர் காலத்தில் மத்திய அமெரிக்க நாடுகளில் நிலவிய கொடூரப் போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதி காத்ததில் பெரும்பங்கு வகித்தவர் ஏரியஸ். அதற்காக அவருக்கு 1987இல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இந்தப் பரிசையும் அவருக்குரிய வரலாற்றுச் சிறப்பையும் யாராலும் ரத்து செய்ய முடியாது.
வட அமெரிக்காவுக்கும் தென்அமெரிக்காவுக்கும் ஒரு நீண்ட இயற்கையான பாலம் உண்டு. இந்தப் பாலத்தை இஷ்த்மஸ் என்பார்கள். இப்பாலத்தில் பெலிஸ், கோஸ்டா ரிக்கா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர், பனாமா, குவாட்டமாலா, நிகரகுவா என்று ஏழு நாடுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்ததுதான் மத்திய அமெரிக்க நாடுகள்.
Add Comment