அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதியின் பதவியைப் பறித்தாகிவிட்டது. தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. சுபம் போட்டுவிட்டு அடுத்த நாட்டின் சங்கதிகளைக் கவனிக்கலாம் என்றால், தண்டனை தீர்மான அத்தியாயம் தான் அடுத்த பாகத்திற்கான லீட் ஆக அமைந்துள்ளது.
நாட்டின் தலைவரை பதவியிலிருந்து இறக்கி வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். எப்படியும் மரண தண்டனை தான். குறைந்தபட்சம் ஆயுள் தண்டையாவது கொடுத்தே தீருவார்கள் என்கிற பேச்சுகள் வேறு. அண்மையில் அந்நாடு எடுத்த, தன் தலைவிதியை மாற்றக்கூடிய பெரிய முடிவு இதுதான். சந்தேகமில்லாமல் குழப்பங்களின் கூடாரமாகத் தான் தென் கொரியா உள்ளது. முதலில் உள்நாட்டுச் சிக்கல்கள்.
மொத்தமுள்ள முந்நூறு உறுப்பினர்களில் 204 பேர் ஜனாதிபதியின் பதவி பறிப்பிற்கு ஆதரவாகவும், 85 பேர் எதிராகவும் வாக்களித்திருக்கிறார்கள். இதனால் முறைப்படி ஜனாதிபதி யூன் பதவியிலிருந்து விலக்கப்படுகிறார். மேலும், உரிய விசாரணைக்குப் பிறகு நடுவர்களின் தீர்ப்பின் படி, தண்டனையோ, தீர்மான ரத்தோ முடிவாகும். தீர்ப்பளிப்பதற்கு நடுவர்களுக்கு நூற்றெண்பது நாள்கள் அவகாசம். அதுவரை இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய பிரதமர், ஹான் டக் சூ இருப்பார். கூட்டம் இத்துடன் கலையலாம். இது தான் சென்ற வார நாடாளுமன்றச் சந்திப்பின் சாரம்சம்.
Add Comment