யூன் சுக் இயோல், தென் கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டது சரியே என அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னறிவிப்புகள் ஏதுமின்றி நள்ளிரவில் அவசரக்கால ராணுவ ஆட்சியை அறிவித்தார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்றார் என்கிற குற்றங்களுக்காக, கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, பாராளுமன்றக் கூட்டம் யூனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை எடுத்திருந்தது. அதையடுத்து, உடனடியாக யூன் காவலில் எடுக்கப்பட்டார். எனினும், அத்தீர்மானத்தை, நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அந்தத் தீர்ப்புதான் சென்ற வாரம் வந்தது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைகளுக்குப் பிறகு, எட்டுப் பேர் கொண்ட நீதிபதிகள் குழு அத்தீர்ப்பினை வழங்கியது. ஒன்பது நீதிபதிகள் இருக்க வேண்டிய குழுவில், தொடக்கத்தில் அறுவர்தான் இருந்தனர். குழப்பங்களுக்கு நடுவில் எப்படியோ எட்டுப் பேரைத் திரட்டி, வழக்கு விசாரணையை முடித்தனர். அனைத்து நீதிபதிகளும், யூனின் பதவி பறிப்பு சரியே என்று தீர்ப்பளித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ‘இப்போது மணி சரியாக 11. 22, யூன் சுக் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப் படுகிறார்’ எனத் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் தலைமை நீதிபதி.
Add Comment