2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, தமிழகத்தின் 39 தொகுதிகளையும் வென்று, அபார வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இந்திய அளவில் தோல்வியடைந்திருந்தாலும், தமிழகத்தின் முடிவில் எல்லோரும் ஒரே குரலாக இதையே கணித்திருந்தனர். எதிர்க்கட்சியினர் உட்பட அனைவருமே இந்த முடிவைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதெல்லாம், மாநில அரசின் மீதான குறைகள் வலுவாக எதிரொலிக்கும். அதன்வழியாக ஆளும் அரசுக்கு எதிராக வாக்குகள் பிரியும். இது பொதுவான வழக்கம். ஆனால் இம்முறை இங்கே இதெல்லாம் எடுபடவில்லை.
குழப்பமில்லாத கூட்டணி என்பது திமுகவுக்குப் பெரிய பலமாக இருந்தது. பாஜக எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்த எதிர்ப்பாகக் கட்டமைக்கப்பட்டு, அதை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்க முடிந்ததே இந்த நூறு சத வெற்றிக்கு அடிப்படைக் காரணமானது.
Add Comment