விஜய் கோவிந்தராஜன்
1972ஆம் ஆண்டு பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பட்டயக் கணக்காளர் தேர்வில் தமிழர் ஒருவர் இந்திய அளவில் முதலிடம் பெற்று குடியரசுத் தலைவரிடம் தங்கப் பதக்கம் பெற்றார். அவருடைய பெயர் விஜய் கோவிந்தராஜன். இன்று ஃபார்ச்சூன் பட்டியலில் இருக்கும் ஐந்நூறு நிறுவனங்களில் நாற்பது சதவிகித நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கும் விஜய் கோவிந்தராஜன் தமிழகத்தில் பிறந்தவர். பெரிய நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகளைத் தரும் மேனேஜ்மென்ட் குரு என இவரை அடையாளப்படுத்துகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, 1969ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பயின்றார் விஜய். பட்டயக் கணக்காளராகச் சிறந்த முறையில் தேர்வுபெற்றதன் அடிப்படையில் கிடைத்த உதவித்தொகையைக் கொண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்று முனைவர் பட்டமும், சிறந்த ஆய்வுக்காக ராபர்ட் போன் பரிசையும் பெற்றார்.
அகமதாபாத் ஐஐஎம் கல்லூரியில் நிதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியராக வணிக மேலாண்மைத் துறை மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். ஒஹையோ மாநிலப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.










Add Comment