40 மயிலை சீனி.வேங்கடசாமி (16.12.1900 – 08.07.1980)
‘ஐந்தடிக்கும் உட்பட்ட குறள் வடிவம், பளபளக்கும் வழுக்கைத் தலை, வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக்காட்டும் அகன்ற நெற்றி, கனவு காணும் எடுப்பான மூக்கு, படபடவெனப் பேசத்துடிக்கும் எடுப்பான மெல்லுதடுகள், கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்குமுழ வெள்ளை வேட்டி, கழுத்துப்பட்டை (காலர்) இல்லாத முழுக்கைச் சட்டை, சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா, கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் துண்டு (உத்தரீயம்), இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை- இப்படியான தோற்றத்துடன் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான்’ என்பது நாரண.துரைக்கண்ணன் வாக்கின் வழி அவரைப் பற்றிய அறிமுகம். ஆய்வுப் பேரறிஞர் என்ற புகழ்ப் பெயருக்குச் சொந்தக்காரர். கதை, கவிதை போன்றவற்றை எழுதுதல் என்னால் இயலாது; எனது எழுத்துக்கள் ஆய்வு நோக்கிலானவை என்று அவரே தனது எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவரது தமிழ்நாட்டு வரலாறு என்ற நூல் மிகுந்த புகழ்பெற்றது. பின்னர் வந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று நூல் எழுத ஒரு வழிகாட்டி போல அந்த நூல் அமைந்தது என்றே சொல்லலாம்.
‘தமிழ், தமிழர் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கைமுறை, இலக்கியம், இயல், இசை, நாடகம், நுண்கலைகள் என இவர் ஆய்வு மேற்கொள்ளாத துறைகளே இல்லை. தனது எழுத்து ஆய்வுப் பணிகளில் கருத்தூன்றியதில், திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். படைப்பாளி, கல்வெட்டு அறிஞர், சொல்லாய்வு நிபுணர், பன்மொழி வித்தகர், சமூகவியல் சிந்தனையாளர், தொல்லியல் களங்களில் ஈடுபாடு கொண்டவர் எனப் பன்முகத் தன்மைகளில் அவரது செயல்பாடுகள் அமைந்தன. 1963-64’ஆம் ஆண்டுகளில் இருமுறை தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் அணி செய்தார். முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதற்கு எதிர்காலத்துக்கு நெறிவழி காட்டிச் சென்றவர்’ என்று கா.சு.பிள்ளையும்; தமிழ்த் தேனி என்று தமிழறிஞர்களாலும் பாராட்டுப் பெற்றவர். ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணி செய்த இவர் பள்ளி சென்று கற்றது பத்தாம் வகுப்பு வரைதான். மறைமலையடிகள், திருவிக போன்ற தமிழறிஞர்களுடன் தொடர்ந்த தொடர்புகளால் தனது தமிழறிவின் திறத்தைக் கூர்ப்பாக்கிக் கொண்டவர். எண்பது ஆண்டுகள் வாழ்ந்திருந்த மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களே இந்த வார உயிருக்கு நேர் பகுதியின் நாயகர்.
Add Comment