25. மிகப் பழைய ஏற்பாடு
சூலகத்தில் உயிரொன்றை ஏந்திச் சுமந்து, தருணம் உதிக்கும் பொழுது மண் காணச் செய்ய இயலுமென்றால் ஒரு மனிதன் தன் சிந்தைக்குள் இன்னொருவனை வார்த்து வளர்ப்பதும் சாத்தியமே. அவன் இன்னொருவனாகவும் இருந்துவிட்டுப் போவதில் எனக்கென்ன சிக்கல்? ஒன்றுமேயில்லை. ஆனால் அவன் கொண்டிருந்த இரு வடிவங்களுக்கும் நான் அகப்படும் சாத்தியமே இல்லை. ஒன்று பத்து நூறாண்டுகளல்ல; ஒவ்வொரு பிறப்பிலும் தவமிருந்து பிறவாது சென்ற ரிஷிகளில்கூட பிரம்மத்தை அறிந்தோர் உண்டே தவிர, அதன் சிந்தைக்குள் சூலிருக்கும் என்னை அறிந்தோர் யாருமில்லை.
நினைவுகூருங்கள். நானொரு சொல். எனவே எனக்கு உயிருண்டு. சொல்லென்பதால் எனக்கொரு பொருளும் உண்டு. ஆதித் தனிமம் என் பொருளை எனக்குள் வைக்காமல் பிரித்துத் தனியே கிடத்தியிருப்பதைச் சொல்லியிருக்கிறேன். நானும் என் பொருளும் பிரம்மத்தின் பிரத்தியேகம். இன்னொருவர் அறிய இயலாது. இன்னும் உச்சரிக்கப்படாத எனக்கு ஒலியில்லை. ஒலியற்ற, உருவற்ற, பொருளும் பிரிக்கப்பட்ட என்னை இயக்கும் திறன் ஓர் எளிய மானிடனிடம் இருக்கவே முடியாது.










Add Comment