மிளகாய்ப்பொடியும், புளியும், பெருங்காயமும் கலந்த குழம்புக்கரைசலின் ஆதார வாசனையோடு, இள முருங்கைக்காய், சிறிய வெங்காயங்கள், கருவேப்பிலை சேர்ந்து எழும் அற்புத மணம் இந்த அதிகாலையை அத்தனை சுகந்தமாக்குகிறது. கண்களை மூடி, அந்த தூரத்துக் குயிலின் ஓசையை இந்தக் கூட்டணிக்கு இசைச் சேர்க்கையாகச் சேர்த்துக்கொள்கிறேன்.
கொல்லை வழி வீட்டினுள் புகுந்த குளிர் மெல்ல என் உடல் தொடும்போது கண்கள் கண்டறியமுடியாத, அதன் கூர் நுனிகளின் வழியே என் மனதிற்குக் கடத்தும் இதத்தை எண்ணி மகிழ்கிறேன். ஒரு ஒத்திசைந்த கூடலுக்கு தயாராகச்சொல்லும் அதனை அதட்டித் தள்ளி வைக்கிறேன், என்றாலும் மெல்லிய கூசலுடன் அது செல்லும் உடலின் நரம்பு வழிகளை இந்த சுகந்தத்துடன் இணைத்து அனுபவித்துக் கொள்கிறேன். இது தரும் லேசான நடுக்கமும், இச்சையும் சேர்ந்த அந்தக்கலவையை கண்மூடி சற்று நேரம் அனுபவிக்கிறேன்.
என்னையும் அறியாமல் மனதில் சுவாதித் திருநாள் கீர்த்தனை ஓடுகிறது. `ஜலஜ பந்துமீத ஜலதீயில் அணையுந்நூ` என்று மனதிற்குள் ஓடிய இசையை மெல்லிய குரலோடு பாடும்போதே இதழ் விரிந்து புன்னகைக்கிறது.
தடாலென்ற சத்தத்தோடு கதவு சாத்தப்படும் ஓசையில் திடுக்கிட்டு அந்த சில நிமிட இன்பத்திலிருந்து விடுபட்டேன்.
Add Comment