சூறாவளி
இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவில் நாட்டுப்பற்று உணர்ச்சி மிகையாக இருந்தது. அதே உணர்ச்சி வேகத்துடன் மக்களைத் தேர்தலுக்கு இட்டுச் சென்றார் புஷ். விளைவு, அறுதிப் பெரும்பான்மையில் கெரியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தார். ஆனால், இயற்கை அவரைச் சும்மா இருக்கவிடவில்லை. கத்ரீனா எனும் சூறாவளியால் சுழற்றி அடித்தது.
2005 ஆகஸ்ட் 29 அன்று, அமெரிக்க வரலாற்றின் இயற்கைப் பேரழிவுகளில் ஒன்று நிகழ்ந்தது. தொலைக்காட்சி நேரலையில் ஹார்டி ஜாக்சனின் வீடு இரண்டாகப் பிளந்த காட்சி தெரிந்தது. கண் முன்னே மனைவி காற்றில் பறந்து போவதைத் தடுக்க முடியாமல், குழந்தைகளோடு பதறி வெள்ளக் காட்டில் ஓடி, தங்களைத் தற்காக்கப் போராடிய காட்சி. நிருபர்களோடு பேசமுடியாமல் கதறி அழுத காட்சி. நிருபர்களுக்கும் பேச வார்த்தையில்லை. எங்கெங்கோ இருந்த செய்தி வாசிப்பாளர்களும் அவசர அவசரமாகச் செய்தி நேர இடைவெளி விட்டனர். அது போல மாணவர்களைக் காக்கப் போராடிய ஆசிரியை, வீட்டுக்கூரை மேல் தத்தளித்தவர்கள் எனப் பலவிதங்களில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடினர். அதுவரையில் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த காட்சிகள் நிஜத்தில் நிகழ்ந்தன.














Add Comment