யாம் பெற்ற துன்பம்
அது என்ன உலக நிதிச் சந்தை? அதற்கும் அமெரிக்காவில் வீடு வாங்கும் ஒருவருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? ராஜாவிடம் ஒரு வீட்டை வாங்கப் பணம் இல்லை. அதனால் வங்கியில் கடன் வாங்குகிறார். வங்கியும் அவருக்குக் கடன் கொடுத்து, “30 ஆண்டுகளில் திருப்பிக் கொடு” என்கிறது. இப்போது வங்கிக்கு ஒரு பிரச்சனை. அடுத்த நாள் மற்றொரு நபருக்குக் கடன் கொடுக்க பணம் தேவை. ஆனால் ராஜாவிடம் கொடுத்த பணம் 30 ஆண்டுகளுக்குத் திரும்ப வராது. என்ன செய்வது?
வங்கி ஒரு தந்திரம் செய்தது. ராஜாவின் கடன் ஒப்பந்தத்தை ஒரு “பத்திரமாக” மாற்றி, அதை வேறு யாருக்காவது விற்றுவிட முடிவு செய்தது. இந்தப் பத்திரத்தை வாங்குபவர், ராஜாவிடமிருந்து வரும் மாதாந்திர தவணைப் பணத்தைப் பெறுவார்.
ஆனால் ஒரு பத்திரத்தை விற்பது கடினம். எனவே, வங்கி 1000 பேரின் கடன் ஒப்பந்தங்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு பெரிய பத்திரமாக உருவாக்கியது. இதற்கு “கடன் அடிப்படையிலான செக்யூரிட்டி” (Mortgage-Backed Security) என்று பெயர். இந்தப் பெரிய பத்திரத்திற்கு “AAA” என்ற தரச் சான்றிதழ் வாங்கி, “இது மிகவும் பாதுகாப்பான முதலீடு” என்று உறுதியளித்தது.
உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், வங்கிகள், ஓய்வூதிய நிதிகள், பல்வேறு நாடுகளின் அரசுகள் என அனைவரும் இந்தப் பத்திரங்களை வாங்கினார்கள். இப்படி 11.8 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் உலக நிதிச் சந்தையில் விற்கப்பட்டன.
ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. இந்த 1000 கடன்களில் பெரும்பாலானவை “சப்-ப்ரைம்” கடன்கள். அதாவது, கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்தும் திறன் குறைவானவர்கள். சிறிது காலம் கழித்து, பலர் வேலை இழந்து கடன் கட்ட முடியாமல் போனார்கள். ஒரு சில பேர் கடன் கட்டத் தவறினால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் கட்டத் தவறினால் பத்திரத்தின் மதிப்பு சரிந்துவிடும். பத்திரங்களின் மதிப்பு குறைந்ததால் அவற்றை வைத்திருந்த முதலீட்டாளர்கள், வங்கிகள், நாடுகள் அனைத்தும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன.














Add Comment