அண்மையில் பெங்களூரின் மெட்ராஸ் சேப்பர்ஸ் (Madras Sappers) ராணுவப் பிரிவு, அதன் அருங்காட்சியகத்தைத் திறந்திருக்கிறது. இது அல்சூரில் இருக்கிறது.
மெட்ராஸ் சேப்பர்ஸ் 1780இல் கிழக்கிந்தியக் கம்பெனியால் சென்னைக் கோட்டையில் தொடங்கப்பட்டது. மாகாணத்தின் முதல் பொறியியல் படைப் பிரிவு. இவர்களுடைய பணி பீரங்கிகளை நிறுத்தி கோட்டைகளைத் தகர்ப்பது, பாலங்கள், சாலைகளை அமைப்பது. இவர்களின் அறைகூவல் ‘வீர மதராசி, அடி கொல்லு, அடி கொல்லு’ என்பது. இவ்வணி உலகப் போர்களில் சண்டையிட்டது. கம்பெனியின் உள்நாட்டுப் போர்களிலெல்லாம் பங்கெடுத்தது. எகிப்து, சீனா, பர்மா என்று காலனி நாடுகளிலும் போர் செய்திருக்கிறது.
1809இல் மெட்ராஸ் சேப்பர்ஸ் ஆங்கிலப் படையுடன் ஸ்ரீரங்கப் பட்டணத்திலிருந்து பெங்களூருக்கு மாறியது. இதுவே இன்றைய கன்டோன்மென்ட். இவர்கள் ‘தம்பிகள்’ என்று அழைக்கப்பட்டனர். இன்றிருக்கும் அல்சூர் ஏரி, கண்டோன்மென்ட் பகுதிகளை உருவாக்கியவர்கள் இவர்களே. பிரிகேட் சாலையில் நிற்பது இவர்களின் போர்ச்சின்னமே. தமிழ்ச் சங்கம், ஏரியின் நடுவில் வள்ளுவர் சிலை என்று அல்சூர் இன்றும் குட்டித் தமிழகம். ஆங்கிலேயர் பெங்களூரில் குடியேறியதன் தொடக்கமும் இதுவே.















Add Comment