போர் முடிந்துவிட்டது என்று காகிதத்தில் எழுதிப் பிரகடனப்படுத்துவது எளிது. ஆனால் அந்தக் கோப்புகள் எப்போது வேண்டுமானாலும் குப்பைத் தொட்டிக்குள் செல்லலாம். போர் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தற்காலிக வாழ்நாள் கொண்ட சம்பிரதாயங்கள் மட்டுமே. எத்தியோப்பியாவின் டிக்ரே பிராந்தியம் இன்று அந்த உண்மையை மீண்டும் நமக்குப் பறைசாற்றுகிறது.
2022 நவம்பரில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம், ஆறு லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய ஒரு கொடும் போரை நிறுத்தியது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து, 2026ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதே மண்ணில் மீண்டும் போர்ப் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
இந்தத் தடவை ஒரு விசித்திரம் உண்டு. நேற்றைய எதிரிகள் இன்றைய தோழர்களாகியிருக்கிறார்கள். போர்க்களத்தில் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து நிற்கிறார்கள். இது எப்படி நடந்தது என அறிய எத்தியோப்பிய வரலாற்றைச் சற்று புரட்டிப் பார்க்க வேண்டும்.
எத்தியோப்பியா, ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நாடு. நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்டது. இங்கு சுமார் 13. 9 கோடி மக்கள் வாழ்கின்றனர். எண்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. அவர்களுள் ஒரோமோக்கள் சுமார் 35 சதவீதம், அம்ஹாராக்கள் 24 சதவீதம், சோமாலிகள் 7 சதவீதம், டிக்ரேயர்கள் 6 சதவீதம், சிதாமாக்கள் 4 சதவீதம் ஆவர்.















Add Comment