‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு இந்த ஆட்டத்தின் முடிவு தெரியும். நான் தோற்றுப் போய்விட்டேன். தேர்தல் ஆணையாளர் தேநீர் அருந்திவிட்டு அபீசியலாய் அறிவிக்கும் வரை காத்திருப்பது வீண். சரி…. அதற்காக எல்லாவற்றையும் தாரை வார்த்துவிட்டுப் பெரும் ஜனநாயகவாதியாய் வீடு போக முடியுமா.? என் எதிர்காலத்திற்கு யார் உத்தரவாதம்.? என் குடும்பத்திற்கு யார் உத்தரவாதம்.?’ கலவரமானார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே. எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு டயல் செய்தார். அடுத்தசில நிமிடங்களில் ரணிலின் கார் மின்னலென வந்து நின்றது.
2015 ஜனவரி 9 காலை ஆறு மணி. சிறுவர்கள், தள்ளாடும் வயோதிகர்கள், நிரந்தர நோயாளிகள் தவிர இலங்கையில் மற்றவர்கள் முன்னைய இரவில் தூங்கி இருக்கவில்லை. அத்தனை பேரும் டி.வி முன்னே தவமிருந்தார்கள். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் புரட்சி செய்து கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் வாழும் உறவுகளின், நண்பர்களின் தொடர்ந்த தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதில் சொல்லிக் களைத்துப் போய் இருந்தார்கள்.
Add Comment