1. எருமையின் அருமை
எருமை. தமிழ் பேசும் நல்லுலகில் வாழ்வில் ஒரு தடவையாவது இந்த வார்த்தையால் திட்டப்படாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே சொல்லலாம். வீட்டில் குடும்பத்தினரால், முக்கியமாக வயதில் மூத்த குடும்ப அங்கத்தினரால், அல்லது பொறுமை குறைந்த ஆசிரியர்களால் அல்லது நண்பர்களால் இந்த வசைச் சொல்லால் திட்டு வாங்குவோர் அதிகம். எருமை என ஒருவரைப் பார்த்து வசை பாடுவதன் நோக்கம் அதன் மூலம் அவரைச் சிறுமைப்படுத்துவதே. பொதுவாகச் சூடு, சுரணை இல்லாதவர், எத்தனை தடவை திட்டினாலும் கோபப்படாதவர், மெதுவாகச் செயல்படுபவர் என்பதைக் குறித்தே எருமை எனும் வசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல என்றும் ஒரு சொற்றொடர் உண்டு. அதன் அர்த்தமும் மழை பெய்தால் அதைப்பற்றி எருமை அலட்டிக் கொள்வதில்லை என்பதே. ஒருவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அதற்கான செயலைச் செய்யாத போது இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப் படுக்கிறது.
எருமைக்குத் தோல் மிகவும் தடிமனானது. அதனால் அதன் மேல் பறவைகள் உட்கார்ந்தாலோ அல்லது பறவைகள் எருமையின் தோலின் காணக் கூடிய பூச்சிகளைக் கொத்திச் சாப்பிட்டாலோ அது பொருட்படுத்துவதில்லை. பறவைகளின் சிறு அலகுகளினால் எருமைத் தோலுக்கு ஒரு பாதிப்பும் வருவதில்லை. அதை விட பறவைகள் தோலிலுள்ள சிறு பூச்சிகளை உண்பதன் மூலம் எருமைக்கு இலவசமான சுத்திகரிப்புச் சேவையும் கிடைக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கதாகும். எருமைகளுக்குப் பொதுவாக மழையில் நனைவது பிடிக்கும். அதனால் அது மழையில் நனைந்து மகிழ்வாக இருக்கலாம். மனிதர்கள் தங்களைப் போலவே எருமையையும் பார்ப்பதால் எருமை மழையில் நனைவது உணர்வற்ற ஒரு சோம்பேறித்தனமான செயலாகத் தெரியலாம்.
பறவைகளைத் தன் மேல் அமர்ந்திருக்க அனுமதிக்கும் எருமை ஒரு சிங்கமோ புலியோ வந்து அதனைக் கடிப்பதற்கு அனுமதிப்பதில்லை. தனக்கு ஆபத்து என்று வந்தால் மூர்க்கமாகப் போரிடக் கூடிய மிருகம் எருமை. உடலளவில் பெரியது என்பதாலும் பலமுள்ளது என்பதாலும் சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் சிங்கம் புலி போன்ற மிருகங்களைத் தனது கொம்புகள் கொண்டு தூக்கி எறியும் வல்லமை வாய்ந்தது. அதாவது எருமை தனது தேவைக்கேற்பச் செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
எருமையின் இயற்கையான குணங்களையோ அல்லது அதன் சிறுமை பெருமைகளையோ அலசி ஆராய்வது இங்கு நமது நோக்கமல்ல. ஆனாலும் மற்றவர்களால் எருமை எனத் திட்டப் படும்போது மனம் வருந்தாமல் அதை ஒரு பெருமையாக ஏற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியே இங்கு ஆராயப் போகிறோம்.
Add Comment