துபாயில் வசந்த காலம் வந்துவிட்டால் சுற்றுலாவாசிகள் மட்டுமில்லை வேற்று நிலப் பறவைகளும் சந்தோஷமாகிவிடும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் புலம் பெயர்ந்து துபாய் மட்டுமின்றி பக்கத்தில் இருக்கும் அபுதாபி, ராஸ் அல் கைமா போன்ற இடங்களுக்கு வருகின்றன.
துபாயின் வடக்கிலிருந்து தெற்கு செல்ல வேண்டும் என்றால் ராஸ் அல் கோர் என்ற பிரதான சாலையைக் கடக்க வேண்டும். இரு வழிச் சாலைகளில் நான்கு லேன்களில் கார்கள் வேகமாகச் செல்லும். வலது புறம் சில கட்டங்கள் இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால், பிரம்மாண்டமான ஷேக் ஜாயீத் சாலையில் இருக்கும் வானுயர்ந்த கட்டடங்கள் தெரியும். இடது புறம் கிட்டத்தட்ட ஐந்நூறு கிலோமீட்டர் தூரத்துக்குச் சதுப்பு நிலம் இருக்கிறது. சாலையில் செல்பவர்களுக்கு அங்கு இருக்கும் புதர்கள் தெரியும். அவ்வளவே. சாலையின் அந்தப் பக்கம் ஒரு பரபரப்பான உலகம், ஆனால் இந்தப்பக்கம் சதுப்பு நிலத்தில் இயற்கையின் இரகசிய உலகம் இருக்கிறது. அங்கு பல விதமான மரங்கள், மீன்கள் உள்ளன.
ராஸ் அல் கோரில் இருக்கும் பறவைகள் சரணாலயத்தில் பல வகையான பறவைகள் இருந்தாலும் மூன்றடியில் இருக்கும் பூநாரைகள்(Flamingo) பார்க்கும் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதிகம் ஆள் அரவம் இல்லாத இடத்தில் பூநாரையைப் பார்ப்பதற்குச் சுமார் ஒரு கிலோமீட்டர் இரு பக்கமும் ஓலை நெய்த இரண்டடிப் பாதையில் நடக்க வேண்டும். அவ்வழி சதுப்பு நிலத்திற்கு நடுவில் இருக்கும் கண்ணாடி அறையில் முடிகிறது. அங்கு தொலைநோக்கிக் கருவி ஒன்றிருந்தது. நாலா பக்கமும் பெரிய பெரிய கண்ணடி ஜன்னல்கள் இருந்தன. அதைத் திறந்தும் பார்க்கலாம். இருக்கைகளில் உட்கார்ந்து பூநாரையைப் பக்கத்திலிருந்து பார்ப்பது போல் பார்க்க வசதி இருக்கின்றது.
Add Comment