எல்லா ஊர்களிலும் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுக்குச் சந்தை இருப்பது போல ஈரோட்டில் இட்லிக்கும் ஒரு சந்தை இருக்கிறது. உணவு வீதி இருக்கிறது. ஒரு சிற்றுண்டிக்கு மட்டும் ஒரு சந்தையா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்.
ஈரோடு திருநகர் காலனியில் பள்ளிபாளையம் செல்லும் சாலையோடு இணையும் பகுதியில் இருக்கிறது இட்லிச் சந்தை. சந்தை என்றால் வரிசையாகப் பத்து இட்லிக்கடைகள். அங்கேயே அமர்ந்து சாப்பிட பிளாஸ்டிக் மேஜை மற்றும் நாற்காலிகள். வரிசையாக பத்து இட்லி கடைகள் இருந்தால் அது சந்தையா? என்று உங்கள் மனத்தில் கேள்வி தோன்றலாம்.
அந்தப் பத்துக் கடைகளில் ஒரு நாளில் குறைந்தது பத்தாயிரம் இட்லிகள் விற்பனையாகின்றன. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இட்லிகள் தயாராகின்றன. ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொண்ணூறு சதவிகித உணவகங்களுக்கு இட்லிகள் இங்கிருந்துதான் செல்கின்றன. இட்லிக்கு தொட்டுக்கொள்ள சாம்பார், தேங்காய்ச் சட்னி மற்றும் காரச் சட்னி ஆகியவை தருகிறார்கள். அசைவ உணவகங்கள் இங்கு இட்லிகள் மட்டும் வாங்கிக் கொண்டு அவர்கள் சமைத்த அசைவக் குழம்புகள் தருகிறார்கள்.
nice one
Fascinating story. These were the startups of the last century. Happy to see them going on.