2025ஆம் ஆண்டு இரு நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ்நாட்டின் தற்கால அரசியல் போக்கை வடிவமைத்ததில் இவ்விரு இயக்கங்களும் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் நவீனச் சமூகக் கட்டமைப்பை இவை எப்படி உருவாக்கின என்பதைத் தெரிந்து கொள்ளச் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
1925 நவம்பரில் காங்கிரசின் நாற்பதாவது மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டின் இறுதியில், ஈ.வெ.ரா, காங்கிரசை விட்டு வெளியேறினார். சுயமரியாதை இயக்கம் 1925ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே காலகட்டத்தில்தான் பிறந்தது.
குடியரசு இதழ் மூலம் சாதி ஒழிப்பு உள்ளிட்ட சுயமரியாதை பிரசாரத்தைப் பெரியார் செய்து வந்தார். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்த நினைத்தார். 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. சாதி ஒழிப்பு, பெண்களுக்குச் சொத்துரிமை, வாரிசு உரிமை, 16 வயதுக்குப் பின் திருமணம் செய்ய, மணவிலக்குப் பெற, விதவைகள் மறுமணம் புரிய உரிமை இவற்றை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேற்கண்ட தீர்மானங்கள் பின்னாட்களில் வந்த அரசுகளால் சட்டமாக்கப்பட்டன.
Add Comment