பிழைக்க ஒரு வழி வேண்டும். சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் தலைவன் பொருள்தேடச் சென்றிருப்பான். பிரிவைத் தாங்கமாட்டாத தலைவி பிரிவுத் துயரை தோழியிடம் சொல்வதைப்போல் பல பாடல்கள் இருக்கும். இன்னும் கொஞ்சம் முன்னேறி வந்து பட்டினத்தார் காலத்தை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு செல்வந்தராக இருந்தபோதிலும் பொருள் தேடிவரக் கடல் கடந்து மகனை அனுப்பியிருக்கிறார். இப்போதெல்லாம் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்துக் கொள்கிறார்கள். சென்ற தலைமுறை வரை பொருளீட்டச் சென்றவர்கள் குடும்பத்தைப் பிரிந்திருக்கிறார்கள். இளமையைத் தொலைத்து பொருள்தேடி முதுமையில் கூடி வாழ்ந்தார்கள். இது கடல் கடந்த வேலைக்கான நிலை.
இந்தியாவிற்குள்ளாகவும் டெல்லி முதல் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் வேலையில் இருக்கிறார்கள். ஏன்… ஹோட்டல் வேலை முதல் எல்லா கடைகளிலும் வெளிமாநிலத்தவர்களும் இங்கு வந்து பிழைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பேண்ட் சட்டையோடு விவசாயக் கூலிகளாக வயலில் இறங்கி வேலை செய்யக்கூட ஆரம்பித்து விட்டார்கள் வட இந்தியர்கள். இப்படி இடம் விட்டு இடம் மாறி வேலை செய்கிறார்கள். எனில் நாம் வேறொரு தளத்திற்கு முன்னேறி விட்டோம்.
Add Comment