ஹாப்பி கௌ (Happy Cow) என்கிற பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ பசு மடம் பற்றிய செயலி என்று நினைக்க வேண்டாம். இது நனிசைவர்களுக்கான (தீவிரச் சைவ உணவினர்) வழிகாட்டி.
ஆங்கிலத்தில் வீகன் (Vegan) என்று அழைக்கப்படும் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் தாவரம், மரக்கறி உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். எந்தவொரு உயிரினத்தின் இறைச்சி, முட்டை, பால், ஏன் தேனைக் கூட உண்ணமாட்டார்கள். இதனால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருக்கின்றன என்பதை வேடிக்கையாகக் குறிக்கும் பெயரே ஹாப்பி கௌ (மகிழ்ச்சியான பசுமாடு).
தெளிவுக்காக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்: சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் அனைவருமே வீகன் சாப்பிடலாம் – இந்த வகை உணவில் பால், தயிர், நெய் முதலியவை இருக்காது, அவ்வளவே. ஆனால் வீகன் உண்ணுவோர் சைவ உணவில் பலவற்றை ஏற்க மாட்டார்கள்.
ஹாப்பி கௌ செயலி என்ன செய்கிறது? உலகின் எந்தவொரு நகருக்குச் சென்றாலும் அங்கு எங்கே வீகன் மற்றும் சைவ உணவுகள் கிடைக்கும் என்ற விவரங்களை எளிதாகக் கொடுக்கிறது. அது சைவ ஹோட்டலாக இருக்கலாம், பேக்கரியாக இருக்கலாம், சூப்பர் மார்க்கெட்டாகவும் இருக்கலாம். கூகுள் மேப்ஸ் தளத்தில் சென்று ‘சைவ உணவகங்கள்’ என்று தேடும்போது வருவதைக் காட்டிலும் இதில் சிறப்பான விடைகள், விமர்சனங்கள் வரும் என்பது இவர்களின் சிறப்பு.














Add Comment