இன்றைய உலகில் எல்லா மூலைகளிலும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவை நமக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதோடு பக்க விளைவாகச் சூழலை மாசுபடுத்தும் கரியமில வாயுவையும் தயாரிக்கின்றன. கரியமில வாயு வேண்டாம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களையும் வேண்டாம் என்று கைவிட வேண்டும். அது நடக்கக் கூடிய காரியமல்ல.
உதாரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள், இரும்புத் தொழிற்சாலைகள், சீமெந்துத் தொழிற்சாலைகள் போன்ற தொழிற்சாலைகள் கரியமில வாயுவினை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. மின்சக்தி உற்பத்தியில் இயற்கை வளங்களான சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவற்றைப் பயன்படுத்திக் கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கும் முயற்சிகள் இத்துறையில் முன்னேறி வருகின்றன. ஆனாலும் அது மட்டும் போதுமா? மற்றைய தொழிற்சாலைகளில் எப்படிக் கரியமில வாயுவின் தாக்கத்தைக் குறைக்கலாம்?
இயற்கை வளிமண்டலத்திலிருந்து கரியமில வாயுவை நீக்குவதற்கு உருவாக்கிய பொறிமுறை மரம், செடி, கொடிகள் போன்ற தாவரங்களாகும். ஆனாலும் இந்த இயற்கைப் பொறிமுறை நமது தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுக்களை உட்கொள்ளுமளவுக்கு உதவப் போவதில்லை. ஆதலால் இக்கேள்விகளுக்கு விடை காண உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
Add Comment