ஜைர் போல்சனாரோ, பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர். இவருக்கு இருபத்து ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம். எதற்காக? அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்பும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக.
ஜைர் போல்சனாரோ 2019 முதல் 2022 வரை பிரேசிலின் அதிபராக இருந்தவர். தீவிர வலதுசாரி அரசியலை முன்னெடுத்தவர். 2022 அக்டோபர் மாதம் அந்நாட்டின் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் முன்னாள் அதிபர் லூயிஸ் லூலா டா சில்வா. போல்சனாரோ பெற்றது நாற்பத்தொன்பது சதவீதத்துக்கும் சற்றே கூடுதலான வாக்குகள். லூலா கிட்டத்தட்ட ஐம்பத்தொரு சதவீத மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். ஆனால் போல்சனாரோ தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
தேர்தலில் முறைகேடு ஏதேனும் நடைபெற்றதா என விசாரணை மேற்கொள்ள ராணுவத்துக்கு உத்தரவிட்டார். முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை, ஆயினும் முறைகேடு நடைபெறவில்லை என உறுதியாகக் கூறிட முடியாது என்ற குழப்பமான ஒரு விசாரணை அறிக்கையை வெளியிட்டது ராணுவம்.
அதோடு, தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி வந்தார் போல்சனாரோ. அவரின் இந்தத் திட்டமிட்ட பரப்புரையும், குறைந்த வாக்கு வித்தியாசத் தோல்வியும், ராணுவத்தின் விசாரணை அறிக்கையும் அவர் ஆதரவாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் காரணமாக அவர்கள் நாடு முழுவதும் தோல்வி மறுப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். லூலாவின் பதவியேற்பைத் தடுக்க வேண்டுமென ராணுவத்தைக் கோரினர்.














Add Comment