நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நாமமிட்ட நெற்றியும், முகம் நிறைந்த புன்னகையுமாக விட்டல்தாஸ் மகராஜ் தன் பஜனைப் பாடல்களுக்கிடையே இறைவனிடம் கையேந்துங்கள் எனப் பாடும்போது ஒலிப்பது நாகூர் ஹனிபாவின் மத, அரசியல் அடையாளங்களைக் கடந்த இசையாளுமையே. தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படும் கலைஞனாக இருக்கிறார் நாகூர் ஹனிபா.
முஹம்மது இஸ்மாயில் ஹனிபாவின் பூர்விகம் நாகூர் என்பதால் அதுவும் பெயரோடு ஒட்டிக்கொண்டது. பள்ளியின் இறைவணக்கப் பாடலில் தொடங்கியது இவருடைய இசைவாழ்வு. மசூதிகளிலும், அப்பகுதியில் நடந்த இஸ்லாமியத் திருமணங்களிலும் பாடினார். பதினைந்து வயதில் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் முதல் கச்சேரியை நடத்தினார்.
மலேசியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தந்தைக்கு இங்கிருந்து குடியரசுப் பத்திரிகையை வாங்கி அனுப்புவார் ஹனிபா. அதைப் படித்துவிட்டு அனுப்பும் வழக்கத்தால் இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. மகன் அரசியல் பாதையில் போகக்கூடாது என எண்ணிய அவருடைய அப்பா, திருவாரூரில் மளிகைக் கடை நடத்திய தம்பியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கே, இளம் வயதில் தீவிரமாக அரசியல் களப்பணியாற்றிக் கொண்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நண்பரானார் ஹனிபா. ஓரிரு வயது இளையவரான கருணாநிதியுடன் அருகில் இருந்த ஊர்களில் நடந்த அரசியல் கூட்டங்களுக்குச் சென்றார் ஹனிபா. அரசியல் மேடைகளில் ஒலிக்க ஆரம்பித்தது ஹனிபாவின் குரல்.














சிறப்பான நினைவுகூறல், அழகிய தகவல்களுடன் கட்டுரை நிறைவாகிறது. வாழ்த்துகள்.