ஒரு மனுஷிக்கு எத்தனை பெயர் இருக்கலாம்..? ஒன்று, இரண்டு அல்லது மூன்று..? எனக்கு ஒன்பது பெயர்கள். ஒரே நேரத்தில் ஒன்பது பெயர்கள் வைத்துக் கொண்டு வாழ்வது என்பது எத்தனை சிரமம் தெரியுமா? அஷ்டலட்சுமிகளுக்காவது அவரது எல்லா பெயரும் லட்சுமி என்று முடியும்படி இருக்கிறது. ஆனால் எனக்கோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒன்பது பெயர்கள். என் ஒன்பதுநாம சோகக்கதையை கேளுங்கள்.
எனக்குச் சூட்டப்பட்ட முதல் பெயர் சிவசங்கரி. எங்கள் தாத்தா பெயர் சிவசுப்பிரமணியம். பாட்டி பெயர் சங்கரகோமதி. அதில் இருந்து சிவாவை உருவி, இதில் இருந்து சங்கரவை திருடி வைத்த பெயர் தான் சிவசங்கரி. குடும்பமே ஒன்று கூடி குதூகலமாகப் பெயர் சூட்டிவிட்டு என்னை அப்பெயர் கொண்டு கூப்பிடக் கூடாது என்ற முடிவையும் அன்றே எடுத்துவிட்டுத்தான் கலைந்து சென்றார்கள். ஏன் என்று கேட்டால் வீட்டுப் பெரியவர்கள் பெயரைச் சொல்லுவது பாவக் கணக்கில் சேருமாம். அப்படி என்றால் எதற்காக அந்த பெயர் வைக்கவேண்டும் என்று கேட்டால் தாத்தா பாட்டி பெயரை பேரன் பேத்திக்கு சூட்டுவது புண்ணியக் கணக்கில் சேருமாம். சிவனும் திருமதி சிவனுமே டரியலாகும் இடம் போலத் தெரிகிறதல்லவா? மேலே படியுங்கள்.
Add Comment