113 உறவுகள்
இந்திரா காந்தி எங்கேயோ இருப்பவர் என்பதாலோ என்னவோ அவர் மீதான தீவிர விருப்பத்தைப்போலவே படுகொலையின் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிரான தீவிர வெறுப்பும் இங்கே பெரிதாக இருக்கவில்லை. பெயருக்கு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் மோட்டார் உதிரி பாகங்கள் விற்கிற நான்கு சர்தார்ஜிக்களை அடித்ததோடு கடமையை முடித்துக்கொண்டது தமிழ்நாடு காங்கிரஸ்.
பொதுவாகவே கலவரங்கள் பொதுமக்களால் நடத்தப்படுவதில்லை. பொறுக்கிகளால் நடத்தப்படுவதில்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். ஆரம்பிக்கப்பட்ட கலவரத்தில் ஆதாயம் இருந்தால் மட்டுமே பொறுக்கிகள் கலந்துகொள்கிறார்கள். அதிகாரமே கலவரங்களை ஆரம்பித்து வைக்கிறது. ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ தங்கள் தரப்பிற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகக் காட்டிக்கொள்ளவே கலவரங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.
பச்சையப்பன் கல்லூரியில் இதை நேரடியாகப் பார்த்தவன் என்பதால் அவனுக்குக் கலவரங்களைப் பற்றி நன்றாகவே தெரியும். படித்த காலத்தில் எழுதவும் ஆரம்பித்துவிட்டவன் என்பதால் நடப்பதை – அதில் தானே நேரடிப் பங்களிப்பாளனாக இருந்தாலும் தள்ளி நின்று தன்னையும் சேர்த்து அதை என்ன ஏது என்று ‘பார்க்க’வும் அவனால் முடிந்திருந்தது. படிக்கப் படிக்க, படங்களைப் பார்க்கப் பார்க்க மிகச் சில வருடங்களிலேயே தன்னைச் சுற்றி நடப்பவற்றை அலசிப் பார்ப்பதும் பேசுவதும் அவனுக்கு இயல்பான காரியமாக ஆகிவிட்டிருந்தது.
Add Comment