122 பயிற்சி
தன்னால் காட்டமுடிந்த அதிகபட்ச பணிவு, குர்த்தாவுக்கு பட்டன் போட்டுக்கொள்வதுதான் என்பதைப்போலக் கதவைப் பேருக்குக்கூடத் தட்டாமல் (தட்டிவிட்டு வரக்கூடாதா என்ற கேள்விக்கு, திறந்திருக்கிற கதவை ஏன் தட்டவேண்டும் என்கிற எதிர்க்கேள்விதான் பெரும்பாலும் பதிலாய் வரும்) பாண்டுரங்கன் சூப்பிரெண்டண்டண்ட் எதிரில்போய் நின்று, ‘கூப்ட்டீங்களாமே’ என்றான்.
அவரைப் பற்றி இவனிடம் சொன்னதைப்போலவே இவனைப்பற்றியும் ஜெட்டு மோகன் அவரிடம் சொல்லியிருக்கவேண்டும்.
‘உக்காருங்க’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என ஆபீஸ் டைரியைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
உட்காரச் சொன்னதே, ஆச்சரியத்தில் ஆளைப் பாதியாக்கிவிட்டது. ஆபீஸர் என்பவர் அதிகாரத் தோரணை காட்டுபவர். அதனாலேயே அவர்களிடம் பணிவாக நடந்துகொள்ளக்கூடாது. கொஞ்சம் பணிவு காட்டினாலும் ஏறி நம்மை குனியவைத்துவிடுவார்கள் என்கிற எண்ணம், ஏசி பிரஸாத் ரூபத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்ததால், சூப்பிரெண்டண்டண்ட் ஏசி என்று எல்லோரிடமும் வெட்டி விறைப்புடன் இருப்பதால், இவன் சாதாரணமாகப் பேசுவதே சண்டைபோடுவது போல இருக்கும். இதுதான் பாதி ஆபீஸர்களிடம் திமிர்ப்பிடித்தவன் என்கிற பெயரைத் தனக்கு வாங்கிக்கொடுக்கிறது என்பதே இவனுக்குத் தெரியாது. சொன்னாலும் ஏறாது. எழுத்தாளன் என்றால் கிரீஸோ எண்ணெயோ பார்க்காத நட்டு போல்ட்டுக்களால் ஆன பாரதியாராக நடித்த எஸ் வி சுப்பையாபோல அலைந்துகொண்டிருக்க வேண்டியதில்லை என்பதே, டீ குடிக்கலாமா என்பதைக்கூட பராசக்தி கோர்ட் சீன் போலப் பேசுகிற ஜெயகாந்தனை வேறு அடிக்கடிப் பார்த்துக்கொண்டு இருந்ததால் இவனுக்கு உறைத்ததில்லை.
Add Comment