128 பத்து
ஷங்கர் ராமன் வீட்டுப் பச்சை நிற இரட்டை மரக்கதவின் மேல்பகுதியில் மெல்லிய இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளே ஒல்லி என்பதால் இவன் கைகளும் மெலிதானவை; விரல்களும் நீளம். எனவே, இவனே கைவிட்டுத் தாளிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்துவிடுவான். காலிங் பெல் அடித்தாலும் டிவி பார்த்துக்கொண்டிருக்கிற மாமா மாமி காதில் டிங் டாங் என்கிற அழைப்புமணிச் சத்தம் கேட்குமா என்பதே சந்தேகம்.
‘யார்னு பாரு’ என்று ஷங்கர் ராமன் ஒருமுறைகூடச் சொல்லிக் கேட்ட ஞாபகமில்லை. பெல் அடித்தால் ஷங்கர் ராமன் உள் அறையிலிருந்து தானே நிதானமாக நடந்துவருவான். ‘ஏம்ப்பா’ என்று கேட்டாலும் ‘எவ்ளோ நேரம் பெட்லையே உக்காந்துண்டு இருக்கறது’ என்று சொல்லக்கூடிய ஆள்தான். காட்டிக்கொள்ளாவிட்டாலும் பார்க்கக் கஷ்டமாகத்தான் இருக்கும். நாள் தவறாமல் போகிறவன் என்பதால் இவன், மணி அடிப்பதே இல்லை. இடப்புறக் கதவின் மரத்தையொட்டிய முதலாவது இடைவெளியில் கைவிட்டால் இவனுக்கு மணிக்கட்டுவரை போகும். இடதுகையை உள்ளே விட்டு நடுவிரலால் தாழ்ப்பாளின் நாக்கைத் தள்ளி, ஒரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய்விடும் அளவிற்குத்தான் உடம்பும் இருந்தது என்பதால் நடைவழியில் செருப்பைக் கழற்றிவிட்டு நேரே, அடிப்புறம் மரப்பட்டை தாங்கி நிற்க, சாய்த்து மாட்டப்பட்ட, கையால் வரைந்த காஞ்சி பெரியவாளின் படம் இருக்கும் ஹாலுக்குப் போய்விடுவான்.
பின்னால் யாரோ நிற்பதைப்போன்ற உணர்வில் திரும்பிப் பார்க்கும் வயதான வைக்கம் முகமது பஷீர் போல இருக்கும் ஷங்கர் ராமனின் அப்பா, மூக்கில் இருக்கும் முடியை அனிச்சையாகப் பிடுங்கியபடி அண்ணாந்து பார்த்து, ‘நீ எப்படா வந்தே’ என்று கதவைத் தாள் போட மறந்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வில் குழப்பமாகப் பார்ப்பார். மாமி, டிவியை விட்டுக் கண்ணை எடுக்காமலே, ‘வாடா’ என்பார். இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வரும் ஷங்கர் ராமன் ‘வாப்பா’ என்று மரியாதைக்கு ஒரு நிமிடம் நிற்பான். இவன் டிவி பார்க்கத் தொடங்கிவிட்டால் அவன் பாட்டுக்கும் தன் அறைக்குள் போய்விடுவான்.
Add Comment