130 குட்பை
இறுதிக்குச் சற்றுமுன் வரவிருக்கிற சம்பவம் நிகழ்ந்து, இருபது வருடங்கள் கழித்து, தி நகர் ஜிஆர்டி ஜிராண்ட் டேய்ஸில் நடந்த சிவரூபன் மச்சினியின் திருமணத்திற்கு இவன் மனைவியோடு போயிருந்தான். தொலைக்காட்சிகளில் மனைவியுடன் (அவர் மாணவியாக இருந்ததிலிருந்தே) அவருடன் முகம் காட்டிப் பிரபல மனநல மருத்துவராகியிருந்த சிவரூபன், வழியிலேயே பார்த்து மடக்கி, இவன் ‘என்ன, எங்க’ என்று சிரித்தபடி கேட்பதைப் பொருட்படுத்தாமல், கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துக்கொண்டு, நேரே மாடிக்குப்போய் பெரிய ஹாலுக்குள் நுழைந்தார்.
உள்ளே மூன்று பெரிய பெரிய சோபாக்கள் போடப்பட்டிருந்தன. நடுநாயகமாக ஜெயகாந்தன் அமர்ந்திருந்தார். பக்கத்து சோபாவில் நர்மதா ராமலிங்கமும் எதிரில் இருந்த சோபாவில் திலகவதியும் உட்கார்ந்திருந்தனர். டீப்பாயில் மதுப் புட்டிகளும் கோப்பைகளும் சிறு தீனிகளும் இருந்தன.
இவனைப் பார்த்ததும் ஜெயகாந்தன், ‘அடடே வா வா வா’ என்று எட்டி இழுத்து மடியில் உட்காரவைத்துக்கொண்டார். இவனுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. இவன் தலையைத் தடவிக்கொடுத்தபடி, எதிரில் நின்றிருந்த இவன் மனைவியிடம், ‘இவன் என் புள்ள மாதிரிம்மா’ என்றார். சட்டென உள்ளூர இவனும் கொஞ்சம் இளகிவிட்டிருந்தான் எனினும் அதைக் காட்டிக்கொள்ளாமல், மரியாதைக்காகக் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்துவிட்டுக் கூச்சத்துடன் விட்டால் போதும் என்பதைப்போல அறையைவிட்டு வெளியில் ஓடிவந்துவிட்டான்.
பின்னாலேயே வந்த சிவரூபனிடம், ‘எதுக்கு ரூபன்’ என்றான்.
Add Comment