166. நாடெங்கும் எதிர்ப்பலை
சட்ட அமைச்சர் கோகலே ஆகஸ்ட் 7ஆம் தேதி பாராளுமன்றத்தில் இன்னொரு அணுகுண்டைப் போட்டார். பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் அரசியல் சாசனத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். இந்த முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், பிரதம மந்திரி ஆகியோரது தேர்தல் குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, இவர்களது தேர்தல் குறித்த முறையீடுகள் பாராளுமன்றத்தின் சிறப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட குழுவால் மட்டுமே விசாரிக்கப்படும். இது குறித்து விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது. இதன் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி, அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்த தீர்ப்பே செல்லாது என்று ஆனது.
இதற்கு விளக்கம் அளித்த சட்ட அமைச்சர் ‘நாட்டின் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரதமர் பதவியில் அமரும் ஒருவரை, அற்பக் காரணங்கள் காட்டி நீதிமன்றங்கள் அவர்களது தேர்தல் செல்லாது என்று சொல்லிவிடக் கூடாது’ என்று கூறினார்.
இந்தச் சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் அறிமுகமான மூன்றாவது நாளில் ஜனாதிபதியின் கையெழுத்து வரை எல்லாம் முடிந்துவிட்டது. இது குறித்துப் பாராளுமன்றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மோகன் தாரியா, ‘பாராளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்திடம் மண்டியிட்டுவிட்டது’ என்று விமர்சித்தார்.















Add Comment