95.கோட்சேவுக்குத் தூக்கு
நாதுராம் வினாயக் கோட்சேவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவரும், ஹிந்து ராஷ்டிரா தினசரியின் நிர்வாகியுமான நாராயண தத்தாரேய ஆப்தேவையும் போலிஸ் கைது செய்தது. இவர்களோடு சேர்த்து, பூனாவைச் சேர்ந்த சங்கர் கிஸ்தய்யா, குவாலியரைச் சேர்ந்த தத்தாத்ரேய பார்ச்சுரே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா, நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே ஆகியோரும் அடுத்தடுத்துக் கைதானார்கள்.
ஆர்.எஸ்.எஸ். என்ற ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான நாதுராம் வினாயக் ராவ் கோட்சே இந்து மகா சபா என்ற அமைப்பில் முக்கிய உறுப்பினர். ஹிந்து ராஷ்டிரா என்ற மராத்தி தினசரியின் ஆசிரியரும் கூட. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான கோட்சே, தனது தினசரியில் காந்திஜி இந்துக்களின் நலனைப் புறக்கணித்து, முஸ்லிம்களுக்கு ஆதரவானவர் என்று கடுமையாக விமர்சனம் செய்தவர்.
சதிகாரர்களில் ஒருவர் என்று கைது செய்யப்பட்ட திகம்பர் பேட்ஜ், பின்னர் அப்ரூவராக மாறிவிட்டார். இவர்கள் மட்டுமின்றி விநாயக் தாமோதர் சவர்க்கரையும் கைது செய்து, அவர்தான் இந்த சதித் திட்டத்தின் மூளை என்று அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.
Add Comment