06 – பிடித்தால் படிப்பேன்
வலோத்யாவின் வீட்டிலிருந்து கிளம்பி அதே தெருவில் ஏழு நிமிடங்கள் நடந்தால் பள்ளி வந்துவிடும். ஆனாலும் பள்ளிக்கு எப்போதும் தாமதமாகத்தான் செல்வான். நேரத்தை மிச்சப்படுத்த, குளிருக்கு அணியும் கோட் கூட அணிந்து செல்வதில்லை. ஆனாலும் சரியான நேரத்துக்குச் சென்றதில்லை.
முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை அதே பள்ளியில்தான் படித்தான். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகம் தொல்லை கொடுக்கவில்லை. அவனது கவனம் படிப்பில் இல்லை என்று அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஒழுக்கத்துடன் வளர்கிறானா என்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். அதில் வலோத்யா எப்போதும் முழு மதிப்பெண்கள் எடுத்தான்.
வீட்டிலிருப்பதைப் போலவே பள்ளியிலும் துருதுருவென இருந்தான் வலோத்யா. அவனால் தீவிரமாக ஒன்றின் மேல் மட்டும் கவனம் செலுத்த முடியவில்லை. முதல் வகுப்பின் முதல் பாடம் சோவியத்தின் தந்தையான லெனினைப் பற்றியது. அவரது எழுச்சியூட்டும் உரைகள், விவேகத்துடன் கட்சியை வழிநடத்திய சம்பவங்கள், பிரகாசமான கம்யூனிச எதிர்காலத்தை சோவியத்துக்குத் தருவதைப் பற்றிய கனவுகள் என்று எதிலும் லெனின் நிறைந்திருந்தார்.













Add Comment