8. மாயமுனி
ஒருசில விநாடிகள் மட்டுமே அவனைப் பார்த்தேன். அதுவும் பின்புறமாக. அதற்குள் அவன் மறைந்துவிட்டான். நினைவுகூர முயற்சி செய்தபோது என் வயதை நிகர்த்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் தோன்றியது. உடனே அவன் ஒரு நூற்றுக் கிழவன் என்றும் தோன்றியது. அவனது தலைமுடி, பின்புறத் தொடைகளைத் தாண்டிக் கீழே இறங்கியிருந்தது நிச்சயம். அதனாலேயே அவன் இடுப்புக்குக் கீழே ஆடை அணிந்திருந்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பொதுவாக நாங்கள் அத்தனை நீளத் தலைமுடி வைத்துக்கொள்வதில்லை. தோளைத் தாண்டுமானால் தீக்கொண்டு பொசுக்கிவிடுவது வழக்கம். ஆரியர்கள் கூர்மையான கற்களை இழைத்துச் செய்த கத்தியைப் பயன்படுத்திச் சிகையை நறுக்கிக்கொள்வார்கள். இப்படி முழங்கால்வரை நீளும் சிகை வைத்தோரை நான் கண்டதில்லை.
எப்படியாவது அவனைத் தேடிப்பிடித்துவிடுவது என்ற முடிவுடன் தடாகத்தைச் சுற்றிக்கொண்டு எதிர்ப்புறமாகச் செல்லத் தொடங்கினேன். இப்போது திறந்த வெளி மீண்டும் தருக்களால் நிறைய ஆரம்பித்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாகக் குடிசைகள் இருந்தனவே தவிர தடாகத்தின் கீழ்த்திசையில் கண்ட வரிசை நேர்த்தி இங்கே இல்லை. ஆனால் இங்கேயும் மக்கள் நடமாட்டம் இல்லாமலே இருந்தது. சிறிது தூரம் நடந்து சென்ற பின்பும் அவன் தென்படவில்லையாதலால், திரும்பிவிடலாம் என்று நினைத்தேன்.
அக்கணத்தில் நான் நின்றிருந்த இடத்துக்கு ஐம்பது அறுபது காலடித் தொலைவில் யாரோ ஒருவன், ஒரு தருவினடியில் அமர்வது போலத் தென்பட்டது. காட்சி தென்பட்ட திக்கை நோக்கி நான் காலடி எடுத்து வைத்த கணத்தில் நான் நின்றிருந்த இடத்துக்கு அருகிலிருந்த குடிசையிலிருந்து வெளிப்பட்ட ஒருவன், ‘யார்?’ என்று குரல் கொடுத்தான்.
‘அபாயம் ஒன்றுமில்லை. இரு, வந்து சொல்கிறேன்’ என்று குரல் கொடுத்தபடி நடையைத் துரிதப்படுத்தி அம்மரத்தை நெருங்கினேன்.
Add Comment