9. வான் கண்டேன்
அவனது குகை சற்று விசித்திரமான அமைப்பினைக் கொண்டிருந்தது. பைசாசக் குன்றில் நான் ஏறி வந்த திக்குக்கு எதிர்ப்புற எல்லையில் அவன் என்னைச் சற்று தூரம் இறக்கி நடத்திச் சென்றான். நான் அவனிடம் வெளிப்படையாகக் கேட்டேன்,
‘நீ என்னை எவ்வளவு நேரத்துக்கு உடன் வைத்திருப்பாய்? ஏனென்றால் இருட்டிய பின்பு வந்து என்னை அழைத்துச் செல்வதாக அந்தச் சூரபதி சொன்னார். அவர் வரும்போது நான் இல்லாவிட்டால் அவர் என்னைத் தவறாக எண்ணக் கூடும்.’
அவன் அதற்கு பதில் சொல்லவில்லை. நடந்துகொண்டே இருந்தவன், ஓரிடத்தில் நின்று இரண்டு விநாடிகள் என்னை உற்றுப் பார்த்தான். நாங்கள் அப்போது நின்றிருந்த இடத்துக்கு வலப்புறம் ஒரு நீண்ட பாறை இருந்தது. எப்படியும் நாற்பது யுக நீளமும் இரண்டு நுகத்தடி உயரமும் இருக்கும். அவன் என்னைப் ‘படு’ என்று சொன்னான். எனக்குப் புரியவில்லை. எனவே, என்னவென்று மீண்டும் கேட்டேன். அவன் பதிலளிக்காமல் பாறையை ஒட்டியவாறு அப்படியே மலைச்சரிவில் படுத்தான். ஒரு புரட்டில் உள்ளே போய்விட்டான். அப்போதுதான் அது ஒரு குகை என்பது எனக்குத் தெரிந்தது.
உள்ளே செல்வதா, பேசாமல் திரும்பிவிடலாமா என்று ஒரு விநாடி சிந்தித்தேன். இவன் விஷயத்தில் நாம் இனி பெரிதாக முடிவெடுக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. தவிர அவனிடம் ஆர்வத்தை ஈர்க்கும் ஏதோ ஓர் அம்சம் இருந்தது. அவன் அழகனில்லை. கவர்ந்திழுக்கும் விதமான ஆளுமையோ பேச்சோ கொண்டவனல்லன். தன்னை அலங்கரித்துக்கொள்வதில் சற்றும் விருப்பமற்ற முனியாக இருக்கலாம். அல்லது நான் தேடும் பிராமணனைப் போல, வேறு குலத்தில் பிறந்த இன்னொரு அபிசாரகனாக இருக்கலாம். எதுவுமே இல்லாவிட்டால் என்னைப் போலத் தங்கையையோ தமக்கையையோ இளம் வயதில் இழந்தவனாக இருக்கலாம். தெய்வமாகிவிடும் சகோதரிகள் உடன்பிறந்தாரை எப்போதும் கைவிடுவதேயில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டுச் சகோதரர்கள் கேட்டதைச் செய்து தருவதில் அவர்களுக்கு எப்போதும் தீராத விருப்பம் உண்டு.
Add Comment