37. மணற்சூறை
ஊர் மொத்தமும் பேசி முடித்துவிட்டது. இனி சொல்லவும் புலம்பவும் கதறவும் ஒன்றுமில்லை என்பது போல வாய் மூடி நின்றுகொண்டிருந்தார்கள். ரிஷி பேசவேயில்லை. அவர் யாரையும் பார்க்கவுமில்லை. எப்போதும் திறந்திருக்கும் அவரது வலக்கண் சர்சுதியையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தது. அவரது சிறு அசைவுக்காகக் காத்திருப்பவர்களைப் போலக் கூடியிருந்த அத்தனை பேரும் அவரையே நோக்க, அவர் சட்டென்று கரையில் சம்மணமிட்டு அமர்ந்தார்.
‘குருவே’ என்று அவரது சீடர்கள் சிலர் அவரை நெருங்கப் பார்த்தபோது, கைநீட்டித் தடுத்தார். அவர்களும் அமைதியாக ஒதுங்கி நின்றுகொண்டார்கள்.
அப்போதுதான் கவனித்தேன். காலை நான் குடிசையிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வானம் எப்படிக் கருஞ்சாம்பல் நிறம் பூசியிருந்ததோ, அதிலிருந்து சிறிதும் மாறாதிருந்தது. சூரியன் இன்னும் உதிக்கவேயில்லை. மரங்கள் அசையவில்லை. உயிருடன் உள்ள பட்சியினம் அனைத்தையும் யாரோ வலை வீசிக் கைப்பற்றிச் சென்றுவிட்டார்களோ என்று எண்ணத்தக்க விதமாக ஒரு பட்சியின் குரலும் கேட்கவில்லை. நீர் மறைந்து நிலம் தெரிந்த நதியின் தடம் பார்க்கச் சகியாமல் கூடியிருந்த அனைவரும் தலைகுனிந்து நின்றிருந்தார்கள்.
நதியை நோக்கியபடியிருந்த தனது வலக்கண்ணை ரிஷி மெல்ல மூடினார். அவரது தோள்கள் ஒருமுறை அசைந்ததைக் கண்டேன். இரு கரங்களையும் மடி மாற்றித் திறந்து வைத்துக்கொண்டார். மூச்சுக் காற்றை மெல்லவும் சீராகவும் உள்ளிழுத்துத் தேக்குகிறார் என்று தோன்றியது. சட்டென்று யாரும் எதிர்பாராத விதமாக நதியின் படுகையில் ஒரு சூறை மையம் கொண்டு, சுழித்துக்கொண்டு மணற்பரப்பு சீறியெழுந்து பாய்ந்தது. கூடியிருந்த மக்கள் அலறிக்கொண்டு அஞ்சி நகரப் பார்க்கும்முன் உடலெல்லாம் மண்ணானது. கண்ணெல்லாம் மண். தலையெல்லாம் மண். ஏதோ பெரிய விபரீதம் என்று அச்சம்கொண்டு அனைவரும் கூக்குரலிடத் தொடங்கினார்கள். ‘ஓடுங்கள்! ஓடுங்கள்!’ என்று யாரோ கத்தினார்கள். யாரும் ஓடவில்லை. ஆனால் இருந்த இடத்தினின்று சில அடிகள் தள்ளி நின்றுகொண்டார்கள். ஒரு சுழற்சியில் அடங்கிவிட்டாற்போலத் தெரிந்த மணற்புயல் திடீரென்று அப்போது மீண்டும் சுழித்துக்கொண்டு எழத் தொடங்கியது.
Add Comment