39. ரசமணி
நான் கன்னுலா. என்னைக் குலம் காக்கும் தெய்வமாக எங்கள் மக்கள் வணங்குவார்கள். சற்று விலகி நின்று என்னை நானே கவனித்தால் எல்லாமே அபத்தமாகத் தெரிகிறது. தெய்வமாகி என்ன, குலம் காக்க முடிந்தென்ன. என்னால் என் சகோதரனின் மனத்தை மாற்ற முடியவில்லை என்பதுதான் என் எல்லையைச் சுட்டிக்காட்டும் புள்ளியாக இருக்கிறது.
இன்னொன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். என்னைப் போல நிறையப் பேர் இருக்கிறார்கள். தோராயமாக மூன்று காதப் பரப்பளவுக்கு ஒரு தெய்வமாவது நிச்சயமாக உண்டு. எல்லோருமே வகுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே அளிக்கப்பட்ட சக்திகளைப் பிரயோகிக்க இயலும். எங்கள் ஒவ்வொருவரையும் மற்றவர்களுக்குத் தெரியுமென்றாலும் நாங்கள் பேசிக்கொள்ள இயலாது. ஒன்றுகூடி ஒரு செயலைச் செய்ய முடியாது. அப்படியொரு அவசியம் உருவானால் எங்களைப் போன்ற தெய்வங்களுக்கென்றொரு தலைமைத் தேவி இருக்கிறாள். அவளிடம் சென்று விண்ணப்பித்தால், அது நியாயமானதாக இருக்கும்பட்சத்தில் அனுமதி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் தெய்வமான பின்பு அப்படியொரு சம்பவம் நடந்து கண்டதில்லை.
ஓரெண்ணம் எழுந்தது. அது நியாயமான எண்ணம்தான் என்பதை ஒருமுறைக்குப் பலமுறை நானே பரிசீலித்துப் பார்த்து நிச்சயம் செய்துகொண்டு எங்கள் தேவியை அணுகி விண்ணப்பித்துக்கொண்டேன்.
இது என் சகோதரனைக் காப்பதற்காக நான் கேட்கும் உதவியல்ல. அவன் நமது குலத்தின் பிரதிநிதியாக ஒரு பெரும்பணியை ஏற்றுச் சென்றிருக்கிறான். அந்த பிராமணனை அவன் கொல்ல வேண்டுமென்பது அவனது தனிப்பட்ட விருப்பமோ விழைவோ அல்ல. ராஜனின் உத்தரவு. அப்பிராமணன் என் சகோதரனுக்குப் பகைவனுமல்லன். முற்றிலும் ராஜாங்க ரீதியிலான ஒரு பணியை மேற்கொண்டு சென்றிருக்கும் நம் குலத்து வீரனாக மட்டும் கருதி, அவனுக்கு ஏற்பட்டிருக்கும் அவன் உணராத நெருக்கடியை உணர்த்த விரும்புகிறேன் என்று சொன்னேன்.
Add Comment