42. ஒற்றைத் தர்ப்பம்
பகைவரின் கோட்டையைப் பதுங்கி நெருங்கும் படையினைப் போல வனத்துக்குள் நுழைந்த நதி சுழித்துச் சுருண்டோடத் தொடங்கியது. கவனத்தை நான் அதன் தடத்தின்மீது பதித்தபோது எட்டு பைசாசங்கள் எதையோ தேடி அலைந்து திரிவது முதலில் தென்பட்டது. கணப் பொழுதில் எனக்கு விளங்கிவிட்டது. கன்னுலா தேவி அனுப்பியிருக்கிறாள். இயற்கையின் சில சமிக்ஞைகளைக் கொண்டு ஒரு மனிதன் பைசாசங்கள் நெருங்குவதை உணர்வதற்கும் பைசாசமாக இருந்து தெய்வமான ஒருத்தி, பைசாசங்களை அவற்றின் நோக்கத்துடன் சேர்த்து அறிவதற்கும் வேறுபாடுகள் அதிகம். நான் காமாயினி. எங்கிருந்தாலும் எப்பணியில் ஈடுபட்டிருந்தாலும் என் கவனத்தின் ஒரு கீற்று என் மகன் குத்சனின் மீதிருக்கும்.
‘நம் புத்திரனின் பெரும் சிக்கல் அவனொரு புத்திசாலியாக இருப்பதுதான்’ என்று என் பதி முன்னொரு காலத்தில் அடிக்கடி சொல்வான். அப்போது அதை மறுத்துப் பேசவோ, மாற்றிச் சிந்திக்கவோ எனக்குத் தோன்றியதில்லை. ஆனால் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். புத்திசாலித்தனம் பிழையல்ல. அதனைக் கொண்டு மேற்கொள்ளப்படும் செயலும் அதன் விளைவும்தான் அதன் தரத்தை அறுதியிடும். கணப் பொழுது போதும் எனக்கு, அவன் மனத்தை ஊடுருவி உள்ளே சென்று காண்பதற்கு. இன்னொரு கணம் போதும், அதனைக் கலைத்துப் போட்டு உன்மத்தம் கொண்ட மிருகமாக அவ்வனத்திலேயே அவனைக் காலமெல்லாம் உலவச் செய்வதற்கு. ஆனால் நான் அதனைச் செய்யக் கூடாது. என்னைப் பிணைத்த தருமத்தின் நியதியில் என்றென்றும் நான் நின்றே தீர வேண்டும். வேறு எதனால் அந்த சார சஞ்சாரனின் சிந்தையில் குத்சனைக் குறித்த நினைவுகளின் குறுக்கே புகுந்து என் தரப்பைப் பதிந்து வைக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்?
இதுதான். இப்படித்தான். இதன் அமைப்பினைக் குலைக்க இயலாது. தெய்வங்களுக்கு தருமமும் மனிதர்களுக்கு நியாயமும் வகுக்கப்பட்டவை. தனது நியாயங்களுக்கு அப்பாற்பட்ட தருமத்தின் வெளியில் சஞ்சரிக்க முடியும் மனிதர்களாலேயே பிருத்வி தனது அச்சு பிறழாமல் சுழன்றுகொண்டிருக்கிறது. முனி என்று அதர்வ மகரிஷியாலேயே குறிப்பிடப்பட்ட என் மகனுக்கும் இது தெரியும். ஆயினும் அவன் தனது நியாயத்தின் பிரதிநிதியாகவே இருப்பானென்றால் மாற்று வழியில் கலைத்து ஆடுவது தவிர எனக்கு வேறு உபாயமில்லை.
அந்த எட்டு பைசாசங்களைக் கண்டதும் எனக்கு முதலில் தோன்றியது, இது சரியான இடம். எப்படியாவது இந்த வனத்தினின்று வெளியேறுவதற்கு முன்னர் அந்த சாரனை இவை பிரித்து அழைத்துச் சென்றுவிட வேண்டும். இங்கிருந்து அவர்கள் வெளியேறிவிட்டால் அதன்பிறகு இத்தனை அடர்த்தி மிகுந்த, வசதியான வனப்பகுதி இராது. இடையில் ஒரு குன்றும் அதன் இருபுறமும் கிராமங்களும் மட்டும்தான் உண்டு. சர்சுதி அக்குன்றை இடப்புறமாகச் சுற்றிக்கொண்டு மீண்டும் வலப்புற எல்லையைத் தொட்டுப் பாயத் தொடங்கும். குன்றின்மீது குடியிருப்புகள் கிடையாது. யாரும் வசிப்பதில்லை. நதிப் பிரதட்சிணம் நிகழ்வதால் அக்குன்றை ருத்ர ரூபமாக மக்கள் வணங்குவார்கள். அங்கிருந்து எண்ணி ஆறு காதத் தொலைவில் மகரிஷியின் ஆசிரமம் வந்துவிடும்.
Add Comment