8. ரத்தினப் பொதி
தாவளம்* களைகட்ட ஆரம்பித்திருந்தது. அரசலாற்றங்கரையில் நாநா தேசிகரும்* நகரத்தாரும்* பெரிய பெரிய துகில் பந்தர்களை நிறுவியிருந்தார்கள். அது முழு நிலவு நாளில் கூடும் வழக்கமான தாவளமல்ல. சித்திரைக்கொன்றும் ஐப்பசிக்கொன்றுமாகப் பெருவணிகர்கள் நடத்துவது. பழையாறை ஊர்க்காவல் படையினரோடு, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரின்* பிரத்தியேகக் குதிரைப் படையினரும் உலவுப் பணியில் இருந்தனர். கண்ணெட்டும் தொலைவெல்லாம் மலையமான்களும் குதிரைச் செட்டிகளும்* காயல்பட்டினத்தில் இருந்து ஓட்டி வந்த பரிகளையும் வாசிகளையும் பொதிக் குதிரைகளையும்* அணி அணியாக விலை பேசி விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். மறுபுறம் துகில் பந்தர்களில் சிறிய பட்டுப் பொதிகளில் அடைத்து வைத்த பவழங்களையும் ரத்தினங்களையும் கோமேதகக் கற்களையும் வாங்க இயலாவிடினும் கண்டு வியப்பதற்குப் பெருங்கூட்டம் அலையாடிக்கொண்டிருந்தது. சிறிய, தாற்காலிகப் பனையோலைப் பந்தர்களின் கீழே ஈத்தம்பழங்களும் வாதங்கொட்டைகளும் மூட்டை மூட்டையாகக் குவிக்கப்பட்டிருந்தன. அம்மூட்டைகளின் இடையே நீண்ட மரச்சாரங்களைப் பொருத்தி, யவன தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த மது வகைகளை மூடியிட்ட குவிகொப்பரைகளில் அடுக்கியிருந்தார்கள். நானாவித சல்லாத் துணிகள் ஒருபுறம். சிரிவிஜய தேசத்தினின்று கொண்டு வந்த கற்பூரம்,* வாலீகம்* உள்ளிட்ட வாசனாதித் திரவியங்கள் ஒருபுறம்.
சோழ தேசத்து அதிகாரிகள் அவரவர் தரத்துக்கேற்பச் சிவிகைகளிலும் சகடங்களிலும் தத்தமது குடும்பத்தாருடன் வந்திறங்கித் தாவளத்தில் உலாவிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பெருந்தனத்துடனும் உடன்கூட்டத்தினருடனும் ஓலை நாயகருடனும் ஒன்றிரண்டு வினைஞர்கள்* வந்திருந்தார்கள். அவர்கள் தமது ஆள்வார்* விலை பேசி வாங்கும் சாமக்கிரியைகளை மூட்டை கட்டிச் சிவிகைகளிலும் பரிகளின் மீதும் ஏற்றிக்கொண்டு போனார்கள். நேரம் கூடக் கூட சனக்கூட்டம் மிகுந்துகொண்டே சென்றது. வாங்குவோரினும் களியாட்டு நோக்கில் சுற்றித் திரிவோரே அதிகம் இருந்தார்கள்.










Add Comment