37. நீண்ட பயணம்
அழிபெயல் அவனது வாழ்வின் தவிர்க்க இயலாத பரிபாடையாக* இருக்க வேண்டும். அவன் பிறந்தபோதே அது தொடங்கியிருக்கிறது. பராந்தகனின் மகன் ராஜாதித்தன் தனது தந்தையின் பெயரில் வெட்டிய ஏரியை அவனது தாயும் தகப்பனும் பரிசலில் கடந்துகொண்டிருந்தபோது அவளுக்குப் பிரசவ வலி கண்டது. அதே சமயம் சிறு மழையாகப் பெயல் ஆரம்பித்து அரை நாழிகைக்குள் பரிசல் சுழன்றாடும் வண்ணம் கொட்டித் தீர்க்கத் தொடங்கியிருக்கிறது. வலியில் துடித்தவளுக்கு என்ன செய்ய வேண்டுமென்றோ, எப்படிப் பிரசவம் பார்ப்பதென்றோ அவனது தகப்பனுக்குத் தெரியவில்லை. பரிசல்காரன் தெய்வத்தின் வசம் பொறுப்பைக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். அவனது தகப்பன் தனது கையறு நிலையை எண்ணிக் கலங்கி அழுத வண்ணம், பரிசலை விரைந்து செலுத்த முடியுமா பார் என்று சொல்லிக்கொண்டிருந்தான். அது ஒரு பொருளற்ற வேண்டுகோள் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. சாடிப் பெய்த மழையில் பரிசல் கவிழாமல் கரை காண முடிந்தால் பெரிதென்று அவனுக்குத் தெரிந்தேதான் இருந்தது.
ஆனால் பெயல் ஓயவில்லை. நொடிக்கு நொடி வலுத்துக்கொண்டே சென்றது. சுழன்று அடித்த காற்றில் பரிசல் சுருண்டு சுருண்டு கவிழ்ந்து விழப் பார்த்தது. பரிசல்காரன் ஈசனைச் சரணடைந்தான். தாயும் சேயும் நலமாகக் கரை சேர்ந்தால் ஒவ்வோர் உவாந்தத்துக்கும்* தான் உண்ணாதிருந்து சிவாலயங்களில் உழவாரப் பணி செய்வேனென்று வேண்டிக்கொண்டான்.










Add Comment