நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பட்டியல் கவனம் ஈர்க்கிறது. சைவ மட்டன் குழம்பு, சைவ சிக்கன் 65, சைவ மீன் வறுவல், சைவ இறால், சைவ குடல் குழம்பு என்றெல்லாம் உணவு வகைகளைப் பார்க்க நேரிடுகிறது. முதன்முதலாக இதனைப் பார்த்தபோது முட்டையை சைவ உணவு என அறிவித்ததுப்போல ஆடு, கோழி, மீன், இறால்களுக்குத் தலையில் புனிதநீர் தெளித்து இன்று முதல் நீங்கள் சைவமாகக்கடவது என யாராவது மதம் மாற்றி விட்டார்களா? என அதிர்ச்சியாக இருந்தது. பல விருந்து உபச்சாரங்களில் தொடர்ந்து இதனைப்பார்க்க நேர்ந்தபோது, நடப்பன, பறப்பன, மிதப்பன என எல்லாவற்றையும் பிடித்து, குளோனிங் செய்து சைவஇனம் ஏதாவது உண்டாக்கிவிட்டார்களா? என்றுகூட சந்தேகமாக இருந்து. நல்லவேளை அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை. உணவுப் பிரியர்கள், சமையல் வல்லுநர்கள் சிலரால் சைவம் என திருநாமம் தாங்கிய இந்தப் புதிய உணவுவகைகள் அறிமுகமாகி இருக்கிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் இந்த உணவு வகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
பசுவின் இரத்தம்தான் பால் என்பதால் அதனைக்கூட அருந்தாமல் வாழும் அதிதீவிர சைவ வகையினர் உண்டு. அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆரம்பத்திலிருந்து அசைவம் உண்டு வந்து உடல் சார்ந்த பிரச்னைகள் அல்லது பிற சூழல்களால் அசைவ உணவை மறக்கவும் முடியாமல் உண்ணவும் முடியாமல் இருப்பவர்களும் இங்கே உண்டு. அவர்களுக்காகவும் விருந்து விசேஷம் என்றாலே காரம் சாரமாகத்தான் சாப்பிடவேண்டும் என்கிற தீவிர சிந்தனை உடையவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வந்து சேர்ந்ததுதான் இந்த சைவ முத்திரை தாங்கியப் புதிய உணவு வகை. இந்த உணவு வகைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை விசாரித்தோம்.
Add Comment