அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் வழக்கமான செக்கப். செய்தியாளர்கள் மைக்கும் கேமராவுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். ஹாண்டில்பார் மீசை மறைத்திருக்கும் தன் வாயைத் திறந்து அடிக், இரண்டு வரி பேசுவதற்குள் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. பாயிண்ட் ப்ளாக் ரேன்ஜில். தலைப்பாகை கழண்டு விழுவதற்கு முன் அடிக் கீழே சுருண்டு விழுந்தார். அதன் பிறகும் இன்னும் சிலமுறை அவர் உடலில் குண்டு பாய்ந்தது. அருகில் இருந்த சகோதரர் அஷ்ரஃபை இன்னொரு நபர் சுட்டார். இதெல்லாம் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உத்ரபிரதேச மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2023, ஏப்ரல் 15ம் தேதி, நாற்பதாண்டு கால கேங்க்ஸ்டர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
அடிக் அஹமத். மேற்கு அலாஹாபாத் தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஆனால் அவரின் உண்மையான அடையாளம் இன்டர் ஸ்டேட் கேங்க் 227ன் தலைவர் என்பதுதான். முதல் மூன்று முறை சுயேட்சையாக வென்றார். பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2004ல் ஃபுல்புர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக பாராளுமன்ற உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தொகுதியாக இருந்தது.
Add Comment