57 சிரிப்பும் அழுகையும்
சைக்கிள் ரேலியில் வந்துகொண்டிருந்த லாரிகளும் பாபாவின் ஆம்புலன்ஸாக இருக்கிற வேனும் போகக் கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொன்றும் வர ஆரம்பித்திருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தான். அவ்வளவு பெரிய வண்டி புதிதாக வருவதைக்கூடக் கவனிக்காமல் இருந்தவனுடைய கவனத்தைக் கவர்ந்தது, அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருந்த புதிய ஆள் ஒருவர் கழுத்தில் கட்டிக்கொண்டிருந்த, கட்டங்கட்டமாகப் போடப்பட்டு முதுகில் முக்கோணமாகத் தொங்கிய துணிதான். அவரும் இவனைப்போலவே ஒல்லியாக தாடி வைத்திருந்தார். ஒட்டிய கன்னங்களுடன் முகத்தின் முத்தலை வைத்துப் பார்த்தால் தன்னை விட நான்கைந்து வருடங்கள் பெரியவராக இருக்கலாம் போலத் தோன்றியது.
நாஸிக்கில் மதிய உணவு உண்டுகொண்டிருக்கையில் எதிர்வரிசைக் கோடியில் அந்தத் துணியைக் கழுத்தைச் சுற்றி டவல் போல அணிந்திருந்தவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவருக்கு இருபுறமும் பூசினாற்போல இருவர் உட்கார்ந்திருந்தனர். அந்தத் துணியை எங்கோ பார்த்திருக்கிறோம் என்பது அதைப் பார்த்தது முதலே தோன்றிக்கொண்டு இருந்தது. எங்கு என்பதுதான் பிடிபடவில்லை. இந்துவிலும் வேறு எதோ ஆங்கிலப் பத்திரிகையில் கலரிலும் பார்த்திருக்கிறோம் எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. மின்னலடித்தது போலப் பளிச்சென நினைவுக்கு வந்தது. நாம் நினைப்பது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளப் பக்கத்தில் அமர்ந்திருந்த சுதீரிடம் அவரைச் சுட்டிக்காட்டி, அவர் அணிந்திருக்கும் துணி யாரை நினைவுபடுத்துகிறது என இவன் கேட்டான்.















Add Comment