26. பசுமை குன்றாத துரோகம்
ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் என்னும் சுதந்தர நாடு பிறந்தது. முகம்மது அலி ஜின்னா அதன் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். லியாகத் அலி கான் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதே ஆகஸ்ட் 14, 1947 அன்று கலாட் தன்னை ஒரு சுதந்தர நாடு என்று அறிவித்துக்கொண்டது. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற பகுதிகளான மக்ரா, கரான், லஸ்பேலா போன்ற மாகாணங்களையும் உள்ளடக்கிய அகண்ட கலாட். இனி துன்பமென்று எதுவுமில்லை. கவலைப்பட ஒன்றுமில்லை. யாருக்கும் அஞ்சி வாழ அவசியமில்லை. பூரண சுதந்தரம். பலூச்சிகளின் மண் முழுதும் பலூச்சிகளுக்கே சொந்தம். நம்மை நாம் ஆண்டுகொள்வோம். என்ன இப்போது? காலம் மாறியிருக்கிறது. ஜனநாயகம் தவிர்க்க முடியாததாகியிருக்கிறது. அவ்வளவுதானே? அதனால் பரவாயில்லை. பரந்த மனம் கொண்ட கலாட்டின் மன்னர் நாடாளுமன்ற ஜனநாயகத்தில்தான் இப்போது விருப்பம் கொண்டுள்ளார். புதிய சுதந்தர கலாட் தேசத்தை ஆள்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இனி வரட்டும். தாருல் உம்ரா, தாருல் அவாம் என்று இரண்டு அவைகளை அமைப்போம். நமக்கெனத் தனியொரு அரசியல் சாசனச் சட்டத்தைக் கடைப்பிடிப்போம். நமது சட்டங்களை நாம் எழுதிக்கொள்வோம். எதுவும் யாருடைய தனிப்பட்ட முடிவாக இராது. எல்லாம் மக்கள் முடிவு. பலூச்சி மொழி நமது தேசிய மொழியாக இருக்கும். நாம் பலூச்சிகள் என்பதே நமது தேசிய அடையாளமாகத் திகழட்டும்.
சுதந்தர பலூசிஸ்தான் உருவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட கணத்தில் மக்கள் உணர்ச்சிவயப்பட்டு வீதிகளுக்கு வந்து கண்ணீர் சொரிந்து நின்றார்கள். ஒத்த கருத்துள்ளவர்கள், எதிர்க்கருத்து கொண்டவர்கள், நண்பர்கள், எதிரிகள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், கட்டிப்புரண்ட இனக்குழுவினர், அடித்துக்கொண்டு மண்டை உடைந்து நின்ற அனைவரும் எந்த பேதமும் பாராமல் ஒருவரையொருவர் இறுக அணைத்து வாழ்த்துக் கூறிக்கொண்டார்கள்.
பலூசிஸ்தானில் பிரிட்டிஷார் இருந்தவரை சில உருப்படியான பொது வசதிகளைச் செய்து வைத்திருந்தார்கள். சாலைகள், இருப்புப்பாதை வசதிகள், மின்சார வசதி, நீர்த் தேக்கம்-பராமரிப்பு-விநியோக முறை, தபால்-தந்தி வசதி, அரசு அலுவலக நடைமுறைகள் சார்ந்த ஓர் ஒழுங்கு முறை என்று பல. வெளியே பெரிய பிரம்மாண்டம் தெரியாவிட்டாலும் அவை இல்லாவிட்டால் நவீன காலத்தில் வாழ்வது சிரமம் என்று எவையெல்லாம் உணர்த்துமோ அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகள், மேம்பாடுகள் சார்ந்தவை. இது பலூசிஸ்தானில் மட்டும் நடக்கவில்லை. பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் இருபது இருபத்தைந்து சதவீதம் மட்டுமே பலூசிஸ்தானில் சாத்தியமாகியிருந்தது. ஆனால் ஒப்பீட்டளவில் அதுவே அம்மக்களுக்கு மிகப்பெரிய வசதிகளாகத் தோற்றமளித்தன. சுதந்தர பலூசிஸ்தான், பிரிட்டிஷார் விட்டுச் சென்ற கட்டமைப்பை மேலும் விரிவாக்கி, மக்களுக்கு இன்னும் பல வசதிகளைத் தொடர்ந்து செய்து தரத் தொடங்கும் என்று மன்னர் அறிவித்தார்.









Add Comment