86. உன் பெயர் என்ன?
நீயெல்லாம் ஒரு பிறவி என்று சொல்லிக்கொண்டு இனிமேல் சோழ நாட்டில் வசிக்காதே. வடக்கே இமம் படர்ந்த சிகரங்களுக்குச் சென்றுவிடு. அல்லது அதற்கும் அப்பால் உள்ள நிலம் கடந்து கண்காணா வெளி எங்கேனும் சென்று வேறு பிழைப்பைத் தேடிக்கொண்டு நிம்மதியாக இரு. உன் சிவனே கூட இங்குள்ளதைக் காட்டிலும் அங்கு இன்னும் செல்லுபடியாவான். அவனுக்கு வக்கிருந்தால் அவன் உன்னை வாழ வைக்கட்டும். ஆனால் சோழ மக்களைக் காப்பாற்றுவதற்கென்று சொல்லிக்கொண்டு செய்கிற அழிச்சாட்டியங்களை முதலில் நிறுத்தித் தொலை. உன்னை வல்லவனென்றும் நல்லவனென்றும் நம்பிய பாவத்துக்காக இப்படிப் பொறுமையாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். இல்லாவிடில் இக்கணமே உன் கண்டத்தை நசுக்கிக் கொன்றெறிந்துவிடுவேன்.
திண்ணைக்குக் கீழே சுருண்டு கிடந்த சர்ப்பத்தைப் பார்த்து மூச்சு விடாமல் பேசிவிட்டு அவன் வேறு புறம் திரும்பி அமர்ந்துகொண்டான்.
அடேய், நீ உறங்கவே மாட்டாயா? எதற்கு இப்படி அனத்திக்கொண்டே இருக்கிறாய்?
என்று காவலுக்கு இருந்த வீரன் புரண்டு படுத்தபடி எரிச்சலுடன் கேட்டான்.









Add Comment