33. தாத்தா
செப்டெம்பர் 30, 1955 அன்று மேற்கு பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களையும் இணைத்து ஒரே மாகாணமாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதுவரை பாகிஸ்தான் அரசின் நிதி அமைச்சராக இருந்த சவுத்ரி முகம்மது அலி என்பவரைப் பிரதமராக்கி (இதற்காகவே!) அவர் மூலமாக ஜனாதிபதி இஸ்கந்தர் மிஸ்ரா இதனைச் செய்தார். ஜூலை 1, 1970 அன்று, அப்போதைய ராணுவ ஆட்சியாளர் யாஹியா கான் இந்தச் சட்டத்தை நீக்கி, மீண்டும் பழைய நான்கு மாகாணங்களை நான்காகவே ஆக்கி வைத்தார். இடைப்பட்ட பதினைந்து ஆண்டுகளில் பாகிஸ்தானில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்கள் எக்கச்சக்கம். நாம் அந்தப் பக்கம் போனால் இங்கே திரும்பி வருவது கஷ்டம். எனவே, பலூசிஸ்தான் விவகாரத்தை மட்டும் பார்ப்போம்.
ஒரு தடாலடி நடவடிக்கை. ராணுவத்தை கலாட்டுக்கு அனுப்பி, மன்னரைக் கைது செய்தது. மன்னரின் தம்பி கரீம் கானையும் கைது செய்து சிறையில் வைத்தது. மட்டுமல்லாமல், கலாட் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பிராந்தியங்களிலும் அதற்கு வெளியே இதர பழங்குடித் தலைவர்கள் ஆளும் சிறிய பிராந்தியங்களிலுமாக மொத்த பலூசிஸ்தானிலும் யாரெல்லாம் பாகிஸ்தான் அரசுக்குக் குடைச்சல் தருவார்கள் என்று தோன்றியதோ, அத்தனை பேரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தது. இவற்றை நாம் பார்த்தோம்.
இதில் இஸ்கந்தர் மிஸ்ரா பார்க்கத் தவறியது ஒன்று உண்டு. பலூசிஸ்தான் மக்களின் எழுச்சி என்பது தலைவர்களால் உருவாக்கப்பட்டதல்ல. அவர்கள் புரட்சி செய்ய வீதிக்கு இறங்கியதும் கலவரங்களை நடத்த ஆரம்பித்ததும் யாரும் தூண்டிச் செய்தவையல்ல. அவர்களால் தூண்டப்பட்டே தலைவர்கள் வீதிக்கு வந்தார்கள். வாயில்லா ஜீவனாக அரண்மனைக்குள் ஒடுங்கிக் கிடந்த மிர் அஹ்மத்யார் கானே கொடி பிடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தோம். எனவே, தலைவர்கள் அனைவரையும் கைது செய்துவிட்டபடியால் இனி ராணுவத்தைக் கொண்டு மக்களை நசுக்கிவிடலாம் என்று மிஸ்ரா நினைத்தார். அதுதான் தவறாகிப் போனது.
திடீரென்று நவாப் நௌரோஸ் கான் என்றொரு முதியவர், பாகிஸ்தான் அரசுக்கு எதிரான புதிய ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தொடங்கினார். பலூச்சிகள் அவரை தாதா என்று அழைப்பார்கள். பலூச்சி மொழியில் அதற்குத் தாத்தா என்று பொருள். பலூசிஸ்தானில், ஜால்வன் என்கிற பிராந்தியத்தில் வசித்து வந்த ஸெஹ்ரி என்கிற பழங்குடி இனத்துக்கு அவர் தலைவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எந்த வருடம் என்று சரியாகத் தெரியாத ஏதோ ஒரு வருடத்தில் பிறந்தவர் அவர். பலூசிஸ்தானுக்கு சாலைகள், மின்சாரம், வாகன வசதிகள் எல்லாம் வருவதற்குப் பன்னெடுங்காலத்துக்கு முன்பிருந்து அவர் அந்த இனக்குழுவினர் வசிக்கும் பகுதியை ஆண்டுகொண்டிருந்தார். நீண்ட நெடுங்கால அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதால் செய்திகளுக்கு அப்பால் இருந்திருக்கக்கூடிய ரகசியக் காரணங்களை மிக எளிதாகக் கண்டறியக் கூடியவர்.










Add Comment