மணி இரவு பதினொன்று. மேஜை விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், ஒரு பதினான்கு வயதுப் பெண் தன் உள்ளங்கையில் இருக்கும் ஒரு மாத்திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அறையின் மறு மூலையில் படிக்கப்படாத பாடக்குறிப்புகள் அடுக்கடுக்காகக் குவிந்து கிடக்கின்றன. ஜன்னலுக்கு வெளியே சீனாவின் பெய்ஜிங் நகரம் அமைதியாக உறங்குகிறது. ஆனால் அந்த அறைக்குள் ஓர் உச்சகட்ட மனப்போராட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இப்படித்தான் சீனாவின் பதின்ம வயதினரிடையே வளர்ந்து வருகிறது ‘பார்மஸி ஹை’ என்னும் புதிய கலாசாரம். இது படிப்பு அழுத்தத்தையும், குடும்ப எதிர்பார்ப்புகளின் பாரத்தையும், ஆழமான தனிமையையும் தாங்க முடியாமல், மருத்துவமனை மருந்துகளின் மூலம் தற்காலிக மறதிக்குள் தஞ்சம் புகும் ஒரு தலைமுறையின் கதை.
பார்மஸி ஹை என்பது மருத்துவமனை மற்றும் மருந்தகத்தில் கிடைக்கும் சட்டப்பூர்வ மருந்துகளை மருத்துவக் காரணமின்றி, மயக்க உணர்வையோ மரத்துப்போன நிலையையோ மாயத்தோற்றத்தையோ அடைய விரும்பி அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதைக் குறிக்கிறது. இது கஞ்சா, ஹெராயின் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களால் வரும் போதை நிலை அல்ல. மாறாக இருமல் மருந்து, வலி நிவாரணி, வலிப்பு நோய் மருந்து போன்ற சாதாரணமாக மருத்துவர் பரிந்துரையின் கீழ் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளையே தவறான அளவில் எடுத்து அடையும் மயக்க நிலை.
















Add Comment