டீ குடித்துவிட்டுப் பத்து ரூபாய் கொடுப்பதிலிருந்து, காய்கறி, பால், பழம் வாங்குவதில் தொடங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை வரை இப்போது இந்தியாவில் எல்லோரும் உபயோகிக்கும் ஒரே முறை க்யூ ஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வது. இந்தச் செயல்முறை, ‘கல்யாண வீட்டில் மொய் எழுதுபவர்களின் வசதிக்காக மணப்பெண்ணின் தந்தை க்யூ ஆர் குறியீட்டைக் கொண்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றிவந்தார்!’ என்று துணுக்கு போடும் அளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
2016 ஏப்ரல் 11 அன்று ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface – UPI) தொடங்கப்பட்டது. எனினும் 2016 ஆகஸ்ட் 25 அன்றுதான் அதிகாரப்பூர்வப் பணப்பரிவர்த்தனை முறையாக இது பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டண முறை தோன்றி பத்து வருடங்கள் ஆன நிலையில், இதன் தோற்றம், நடைமுறைகள், சாதகங்கள், எதிர்காலம் பற்றிச் சற்றே ஸ்கேன் செய்து பார்ப்போமா?
இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை வழிகாட்டுதலின் கீழ், இந்தியத் தேசியக் கட்டணங்கள் கழகத்தால் (NPCI) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய பெருமை நந்தன் நிலேகனியைச் சாரும். இவர்தான் இதன் அடிப்படைக் கட்டமைப்பை வடிவமைத்தார். இவர் தவிர, NPCI அமைப்பின் திலீப் அஸ்பே (தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் செயலாக்கத்தை வழிநடத்தியவர்), ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த டாக்டர் ரகுராம் ராஜன் (ஒழுங்குமுறை சார்ந்த ஆதரவை வழங்கியவர்) ஆகியோரும் இதில் முக்கியப் பங்காற்றினர்.
















Add Comment