62. சொந்த சூனியம்
பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களின் போராட்ட வரலாற்றில் அவர்கள் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் (CPEC) திட்டங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் மிகவும் முக்கியமானவை. ஆரம்ப முதலீடு, அறுபத்திரண்டு பில்லியன் டாலர்கள் என்பது சிறிய தொகை அல்ல. திட்டம் இடையூறின்றித் தொடர்ந்து நடக்குமானால் அதன்மூலம் பாகிஸ்தான் அடையக்கூடிய நன்மைகள் மிக அதிகம். நீண்டநாள் நோக்கில், அத்திட்டம் பாகிஸ்தானின் பெரும்பாலான நிதிச் சுமைகளைக் களையக்கூடியது என்பதில் ஐயமில்லை.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு நிலை நேற்று வரை சொல்லிக்கொள்ளும்படியாக இருந்ததில்லை. இன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் கொள்கைகளால் இனி அது சற்று மேம்படலாம். இந்தியப் பிரதமர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (ஆகஸ்ட் 31, 2025) கலந்துகொள்வதும்கூட வழக்கமான ஒன்றல்ல. இந்திய-சீன உறவு நிலை மேம்படத் தொடங்குமானால், சீனா மிக நிச்சயமாகத் தனது வர்த்தக அடிமையான பாகிஸ்தானை இந்தியா தொடர்பான விவகாரங்களில் சற்று அடக்கி வாசிக்கச் சொல்லும். யார் கண்டது? நல்லுறவு என்ற ஒன்று இல்லாதிருந்தாலும் மோசமான சம்பவங்கள் நிகழாதிருக்கும். பாகிஸ்தானுமே, வளர்ச்சியை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டால் வெட்டி விவகாரங்களில் ஈடுபட அவசியம் இல்லாது போகும்.
இவையெல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமானால் பாகிஸ்தானில் சீனா ஆரம்பித்த CPEC திட்டம் இடையூறின்றித் தொடர வேண்டும். நவீன உலகில் யுத்தம் என்பது வர்த்தக யுத்தம் மட்டுமே. வலிமை என்பது பொருளாதார வலிமை மட்டுமே. பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் இது தெரியாதிருக்காது. ஆனால் அவர்கள் செய்த மிகப் பெரிய பிழை, பலூச்சி மக்களைப் புறக்கணித்துவிட்டு, திட்டத்தை அவர்களது நிலத்தில் ஆரம்பித்ததுதான். இது ஆதிமுதல் அவர்கள் செய்து வருவதுதான். மாறுதல்கள் ஏதுமில்லை. எனவே இது புதிய பிழையும் அல்ல. ஆனால் பெரிய அளவில் – நீண்ட நாள் நோக்கில் ஒரு மாபெரும் வளர்ச்சிக்கான வழி புலப்படும்போதாவது சற்று சிந்தித்திருக்கலாம். ஆனால் இல்லை. என்ன செய்ய முடியும்? அது பாகிஸ்தான். அது அப்படித்தான் இருக்கும்.









Add Comment