மேற்கு ஆப்பிரிக்க தேசமான ப்ரூக்கினா பாஸோவின் அதிபர் இப்ராஹீம் ட்ரோரே அளவுக்கு சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து இருக்கும் ஆப்பிரிக்கத் தலைவர் யாரும் இருக்க முடியாது. அவரது நவகாலனித்துவ விரோதக் கருத்துக்களும், மேற்குலகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளும் ஆபிரிக்காவையும் தாண்டி உலகமெங்கும் அவருக்கு ரசிகக் கண்மணிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் பகடி என்னவென்றால் எது பொய் எது மெய் என்று பிரித்தறிய முடியாமல் இருக்கும் நிலைமைதான். ட்ரோரேவின் தத்துவங்கள் என்று ஒரு பைபில் உருவாக்கி ஊதுபத்தி ஏத்திக் கும்பிடும் அளவுக்குச் சென்றுவிட்டது நிலைமை.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவது தான் மெய் என்று சொன்னது எல்லாம் அந்தக் காலம். இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில், யூடியூப் கோஷ்டிகளின் ஆக்கிரமிப்பு தறிகெட்டுச் சென்றுவிட்ட காலத்தில் யாரிடம் எதைப் போய் விசாரிப்பது என்று குழப்பம் நிலவுகிறது.
இப்ராஹீம் ட்ரோரே தன் முப்பத்து நான்காவது வயதில் ப்ரூக்கினா பாஸோவில் 2022ம் ஆண்டு செம்ப்டம்பர் மாதம் ராணுவப்புரட்சி செய்து அதிபரானவர். 1960ம் ஆண்டு சுதந்தரமடைந்தது முதல் நடந்த ஒன்பதாவது புரட்சி. ஆப்பிரிக்காவிலும் பாகிஸ்தானிலும் அப்படித்தான். பல் துலக்கி விட்டு பாத்ரூமில் இருந்து வரும் போது புரட்சி நடந்து முடிந்துவிடும். ஆகவே ப்ரூக்கினபாஸோவாசிகள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.













Add Comment