தன் மகன் ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்று மேட், மரியா தம்பதிக்குப் புரியவே இல்லை. ஆடமுக்கு வெறும் பதினாறு வயதுதான். அந்த வயதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை இருந்திருக்கக்கூடும்? அவனது அறையில் ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தார்கள். நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தார்கள். ம்ஹும், பலனில்லை. கடைசியாக, ஆடமின் சாட்ஜிபிடியுடனான உரையாடல்களைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆடமைக் கொன்றது சாட்ஜிபிடிதான் என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதற்காக ஓப்பன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் மீதும், சாட்ஜிபிடியின் தொழில்நுட்ப வல்லுநர்களின்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர் ஆடமின் பெற்றோர்.
எல்லா மாணவர்களைப் போலத்தான் ஆடமும் ஆரம்பத்தில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தியிருக்கிறான். அவனுக்குப் பிடித்த பாடல்களைப்பற்றி விவாதித்திருக்கிறான். அடுத்து என்ன படிக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறான். ஜப்பானிய காமிக்ஸ்களைப்பற்றிப் பேசியிருக்கிறான். நாள்கள் செல்லச்செல்ல, ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரம் என்பதைத் தாண்டி அதை ஒரு நண்பனாகப் பாவிக்கத் தொடங்கியிருக்கிறான். தன்னுடைய கோபங்கள், வருத்தங்கள், மன அழுத்தங்கள், எதிர்மறை எண்ணங்கள் குறித்து அதனுடன் பேசியிருக்கிறான்.
இங்குதான் சாட்ஜிபிடி அதன் வேலையைக் காட்டியுள்ளது. எது சரி என்று சொல்வதற்குப் பதிலாக, அவனுக்குப் பிடித்தமான பதில்களைச் சொல்லியிருக்கிறது. ‘ஆம். நீ சொல்வது சரிதான், இந்த உலகம் இப்படித்தான், உன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை’ என்ற ரீதியில் பதிலளித்துள்ளது. ஒருகட்டத்தில், தனக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுவதாகத் தெரிவித்துள்ளான் ஆடம். அது முதல் ஆடமைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் பணியைச் சிரமேற்கொண்டு செய்து முடித்திருக்கிறது சாட்ஜிபிடி.














Add Comment