சென்னைப் புத்தகக் கண்காட்சி 2024 இன்னும் நான்கு தினங்களில் முடிவடைய இருக்கிறது. ‘கூட்டம்தான் வருகிறதே தவிர, புத்தகங்களின் விற்பனை திருப்திகரமாக இல்லை’ என்று புத்தகக் கண்காட்சி முடிந்ததும் ஒலிக்கும் பதிப்பாளர்களின் குரல்கள் இப்போதே மெலிதாக ஒலிக்கத் துவங்கி விட்டன. ஒரு காலத்தில் லட்சங்களில் விற்ற பத்திரிகைகளின் விற்பனை இப்போது லட்சத்தின் கால் பகுதிக்கு இறங்கி விட்டன. எங்கேதான் போயினர் இவற்றையெல்லாம் ஒரு காலத்தில் ஓகோவெனச் செயல்பட வைத்த எளிய வாசகர்கள்..?
முதலில் பத்திரிகைகளைக் கவனிக்கலாம். அந்நாளையப் பத்திரிகைகள் ஒரு கூட்டுக் குடும்பம் போல இருந்தன. குடும்பத்தில் உள்ள முதியவர்களிலிருந்து பொடிசுகள் வரை அனைவருக்கும் அதில் ஏதேனும் ஒரு விஷயம் உத்தரவாதமாக இருக்கும். பெரியவர்களுக்கு அரசியல் கட்டுரை, பெண்களுக்கு சமையல் குறிப்புகள், இன்னபிற, இலக்கிய விரும்பிகளுக்குச் சிறுகதை, பொடிசுகளுக்கென்று படக்கதை அல்லது மாணவர் பக்கங்கள்- இவை போன்றவை போதுமானவையாக இருந்தது வீட்டில் அனைவரும் பத்திரிகையை எதிர்பார்க்க.
முதலில் விகடன் தாத்தா ஆரம்பித்து வைத்தார் கூட்டுக் குடும்பத்தை உடைத்துத் தனிக்குடித்தனம் அனுப்புவதை. பெண்கள் சமாச்சாரமா… உனக்குத் தனி வீடு தந்தாயிற்று அங்கே போய்க் கொள், குழந்தைகள் மேட்டரா, உனக்கும் ஒரு புதுவீடு கட்டியாயிற்று அனைத்தையும் அங்கே கொண்டு போ, இலக்கியமா, உனக்கொரு தனி பங்களா ரெடி ஓடிவிடு, மருத்துவம், ஆட்டோமொபைல் போன்ற உங்களுக்கும் தனித்தனி வீடுகள் தயார் போங்கள் அங்கே…. என்று தனித்தனிப் பத்திரிகைகளாகப் பிரித்து அனுப்பியாயிற்று. எம்ஜிஆர் என்றால் நம்பியார், இந்தியா என்றால் பாகிஸ்தான், விகடன் என்றால் குமுதம் மட்டும் சும்மா இருக்குமா..? விகடன் தாத்தா செய்ததைக் குமுதம் மாமாவும் அப்படியே பின்பற்றி தனிக் குடித்தனங்கள் வைத்தார். எல்லாம் முடிந்தபின் தாத்தாவும், மாமாவும் திரும்பிப் பார்த்தால்… வீட்டில் அவர்களுக்கென்று இருந்தது சினிமா மட்டுமே. சரி, இலக்கியத் தம்பியிடமிருந்து கொஞ்சம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அவ்வண்ணமே பத்திரிகைகள் வரத் தொடங்கின.
Add Comment